துணைத் தேர்வுக்கு அனுமதி சி.பி.எஸ்.இ., பதிலளிக்க உத்தரவு
துணைத் தேர்வுக்கு அனுமதி சி.பி.எஸ்.இ., பதிலளிக்க உத்தரவு
UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 04:47 AM
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1 தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால் துணைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்கள் என்றால் அனுமதிப்பது இல்லை. எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மாணவர்களின் நலன் கருதி, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு, ஒரு முறை நடவடிக்கையாக, மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்தும்படி, கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கேந்திரிய வித்யாலயா சங்கதன் மேல்முறையீடு செய்தது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. பிளஸ் 1 வகுப்புக்கு துணைத் தேர்வு நடத்தப்படுகிறதா? ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணைத் தேர்வு எழுத அனுமதி இல்லையா? என, கேள்வி எழுப்பிய முதல் பெஞ்ச், இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் பதில் அளிக்க உத்தரவிட்டது. விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தது.
