UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 02:34 AM
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஆகியவை மூன்று இந்திய குடிமைப் பணிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்ட காலம் சேவையாற்றி அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ மேல்படிப்பை தொடர ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது. இது படிப்புக்கான விடுப்பு என அழைக்கப்படுகிறது. இந்த விடுப்பில் செல்லும் அதிகாரிகள், அனைத்திந்திய சேவை பணிகளுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதில்லை என்ற புகார் எழுந்தது. தாங்கள் வகிக்கும் பொறுப்புகளுக்கு சம்பந்தமுள்ள படிப்பு அல்லது பதவி உயர்வு தரும் படிப்புகளை விடுத்து வேறு படிப்புகளில் சேர்வதாக குற்றச்சாட்டு உள்ளது.இதை தொடர்ந்து, விடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, மேல்படிப்புக்கான விடுப்பில் செல்லும் அதிகாரிகள், படிப்பு விடுப்பின் போது நடத்தை குறித்த வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படிவதாக உறுதிமொழி அளிக்க வேண்டும். தவறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு பணியாளர்கள் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல்படிப்பு விடுப்பின் போது நடத்தை விதிகள் அல்லது நடத்தை குறித்த வழிகாட்டுதல்களை நான் மீறுவது கண்டறியப்பட்டால், எனக்கு எதிராகத் துவங்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைக்கு நான் பொறுப்பாவேன் என்பதை நான் முழுமையாக அறிவேன் என குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழி பத்திரத்தில் அதிகாரிகள் கையொப்பமிட வேண்டும்.
