UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 09:53 AM
மகளிர் 20 உச்சி மாநாடு தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் உள்ள ரேடிசன் ப்ளூ ரெசார்ட் டெம்பிள் பே விடுதியில் ஜூன் 14 முதல் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்தாண்டு உச்சி மாநாட்டின் கருப்பொருள் மகளிர் தலைமையிலான வளர்ச்சி – மாற்றம், செழிப்பு மற்றும் முன்னேற்றம் என்பதாகும். இந்த உச்சி மாநாட்டில் கண்காட்சி, மக்கள் பங்கேற்கும் நிகழ்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்.பாலின சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டு, துருக்கியின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ ஜி20 நிகழ்ச்சிக்குழுவாக மகளிர் 20 அமைப்பு உருவாக்கப்பட்டது.இன்று தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் ஆதரவுடன் தமிழகத்தைச் சேர்ந்த அடிமட்டத்திலான தொழில் முனைவோர் கண்காட்சி மாமல்லபுரம் விடுதியில் தொடங்கி வைக்கப்படும். இந்தக் கண்காட்சி மகளிர் தொழில் முனைவோர் தங்களது திறமைகள், படைப்பாற்றல் திறன், புத்தாக்கம் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் தளமாக இருக்கும். அர்ஜென்டினா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் 20 பிரதிநிதிகளின் காட்சிப்படுத்துதலும் இதில் இடம்பெறும். தடைகளை உடைத்தல், வர்த்தகம் மற்றும் முதலீட்டின் மூலம் அதிகாரமளித்தல், பொருளாதாரத்திற்கான கட்டமைப்பு மற்றும் சேவைகளில் முதலீடு செய்தல் ஆகிய கருப்பொருள்களில் 3 அமர்வுகள் நாளை நடைபெறும். இந்த நிறைவு அமர்வில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பிஜேபியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான திருமதி பாரதி கோஷ், 2015 துருக்கி மகளிர் 20ன் தலைவர் திருமிகு குல்தன் துர்க்தன், 2021 இத்தாலி மகளிர் 20ன் தலைவர் திருமிகு லிண்டா லாரா சப்பதினி, 2022 இந்தோனேஷியா மகளிர் 20ன் தலைவர் திருமிகு உலி சிலாலாஹி, 2023 மகளிர் 20ன் தலைவர் டாக்டர் சந்தியா புரேச்சா ஆகியோர் உரையாற்றுவார்கள். தமிழ்நாடு அரசு வரும் 17-ந் தேதி ஒருங்கிணைத்துள்ள சுற்றுலா மூலம் மகளிர் 20 பிரதிநிதிகள் மாமல்லபுரத்தை கண்டுகளிப்பார்கள்.
