பாட புத்தகங்களில் திருத்தம்: கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு
பாட புத்தகங்களில் திருத்தம்: கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு
UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 03:25 AM
பள்ளிக் கல்விக்கான பாட புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வடிவமைக்கிறது. இந்த பாட புத்தகங்கள், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் உட்பட பல கல்வி வாரியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா காலத்தில் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானதால், சில பாட புத்தகங்களில் சில பிரிவுகள் திருத்தப்பட்டன. சில பிரிவுகள் நீக்கப்பட்டன. இவை, அரசியல் ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.சுவராஜ் இந்தியா கட்சித் தலைவரான யோகேந்திர யாதவ், கல்வியாளர் சுஹாஸ் பால்ஷிகார் ஆகியோர் சமீபத்தில், என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் தினேஷ் சக்ளானிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.பாட புத்தகங்கள் கடுமையாக மாற்றப்பட்டுள்ளதால் கல்வி ஆலோசகர் என்று தங்கள் பெயரை குறிப்பிட வேண்டாம் என அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு, என்.சி.இ.ஆர்.டி., சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளவற்றுக்கு யாரும் தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது. இது கூட்டு முயற்சியின் அடிப்படையிலானது. பல்வேறு நிபுணர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின் பாட புத்தகங்கள் திருத்தப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மாணவர்களின் அறிவு மற்றும் புரிதலின் நிலையை அடிப்படையாகக் கொண்டு பாட புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே எந்த நிலையிலும் தனிப்பட்ட ஆசிரியர் எந்த உரிமையும் கோர முடியாது. மேலும் இந்த திருத்தங்கள் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதன் பிறகே நீக்கப்பட்டுள்ளன. திடீரென இந்த திருத்தங்கள் செய்யப்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் பாட புத்தகங்கள் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள 33 கல்வியாளர்கள் தங்களுடைய பெயர்களை கல்வி ஆலோசகர் என்று குறிப்பிடப்படுவதில் இருந்து நீக்கும்படி என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் தினேஷ் சக்ளானிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில், நாங்கள் உண்மையில் எழுதிய புத்தகம் தற்போது கடுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த புத்தகங்கள் எங்களால் உருவாக்கப்பட்டது என்று கோர முடியாத நிலை உள்ளது. அதனால், கல்வி ஆலோசகர் என்று எங்களுடைய பெயர் குறிப்பிடப்படுவதை விரும்பவில்லை என கூறப்பட்டுள்ளது. புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் பேராசிரியர் காந்தி பிரசாத் பாஜ்பாய், அசோகா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பிரதாப் பானு மேத்தா உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டு உள்ளனர்.
