UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM
ADDED : ஜூன் 20, 2023 12:36 PM
மஹாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சமூகம், பொருளாதார மாற்றத்துக்காக காந்திய வழிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனி நபர் மற்றும் அமைப்புகளுக்கு, மத்திய அரசால் காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது. ஒரு கோடி ரூபாய் பரிசு, சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது. பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, லோக்சபா சபாநாயகர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு, விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்.இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது, உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த, கீதா பிரஸ் என்ற பதிப்பகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதிப்பகம், உலகின் மிகப் பெரிய பதிப்பகங்களில் ஒன்று என்றும், இதுவரை நான்கு கோடிக்கும் அதிகமான புத்தகங்களை பல மொழிகளில் வெளியிட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருந்தது. இது குறித்து காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், கீதா பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது, கேலிக்கூத்தான நடவடிக்கை. கோட்சே, சாவர்க்கர் ஆகியோருக்கு விருது வழங்குவது போல் இது உள்ளது என்றார். இதையடுத்து காங்கிரசுக்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
கீதா பதிப்பகம், நம் நாட்டின் கலாசாரம், நெறிமுறைகள், ஹிந்து மத நம்பிக்கைகளுடன் தொடர்புடையது. மிகத் தரமான இலக்கிய புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில், ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் பணியை இந்த பதிப்பகம் செய்து வருகிறது. இதை விமர்சிப்பவர்கள் யார் என நன்றாகத் தெரியும். முஸ்லிம் லீக்கை, மதச் சார்பற்ற அமைப்பு என கூறியவர்கள் தான், இதை எதிர்க்கின்றனர், வேறு யாரும் எதிர்க்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, இந்த விருது மாபெரும் கவுரவம் என தெரிவித்துள்ள கீதா பதிப்பகம், நன்கொடை வாங்குவதில்லை என்ற தங்கள் கொள்கையின் காரணமாக 1 கோடி ரூபாய் பணப்பரிசை ஏற்பதில்லை என அறிவித்துள்ளது.
