UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM
ADDED : ஜூலை 01, 2023 03:58 AM
டில்லி பல்கலையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி 3 புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பிறகு நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 75வது ஆண்டு கொண்டாடும் நேரத்தில், இப்பல்கலை நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. மாணவர்களை போல், நானும் இங்கு மெட்ரோ ரயிலில் தான் வந்தேன். இப்பல்கலை என்பது ஒரு இயக்கம் போல் செயல்படுகிறது. தனது உயர்ந்த மாண்புகளை டில்லி பல்கலை எப்போதும் நிறைவேற்றி உள்ளது. டில்லியில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் படிக்கின்றனர்.சர்வதேச ஜிடிபியில், இந்தியாவிற்கு முக்கிய பங்கு உண்டு. உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது. நமது வழிகாட்டி சக்திகளாக இளைஞர்கள் உருவாகி உள்ளனர். கல்வியின் நோக்கம் மாறிவிட்டது. நமது மாணவர்கள் என்ன கற்க விரும்புகின்றனர் என்பதில் கவனம் திரும்பி உள்ளது. இளைஞர்களுக்கு புதிய கல்விக்கொள்கை மிகப்பெரிய அளவில் உதவும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.மெட்ரோவில் பயணித்த மோடி!
டில்லி பல்கலைக்கழக நிகழ்வில் பங்கேற்க புறப்பட்ட பிரதமர் மோடி, லோக் கல்யாண் மார்க் ரயில் நிலையத்தில் இருந்து, விஷ்வ வித்யாலயா வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது பிற பயணியருடன் சேர்ந்து அமர்ந்து உரையாடியபடியே சென்றார். இந்த புகைப்படங்களை தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்த மோடி, இளைஞர்களுடன் சேர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டார். டில்லி பல்கலை நிகழ்வில் மாணவர்களிடையே பேசுகையில், உங்களை போலவே நானும் இன்று மெட்ரோ ரயிலில் பயணித்தேன். மாணவர்கள் ஏராளமான விஷயங்களை பேசுகின்றனர். அறிவியல் முதல் ஓ.டி.டி.,யில் புதிதாக வெளியான வெப் சீரிஸ் வரை அவர்களுக்கு பேச ஆயிரம் விஷயங்கள் உள்ளன என தெரிவித்தார்.
