UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM
ADDED : ஜூலை 03, 2023 06:23 AM
கோபி:
படிப்பு என்பது எனக்கு கிடைத்த ஏணி, என கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷிணி பேசினார்.ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் சேர்க்கை முகாம் கோபியில் நடந்தது. முன்னிலை வகித்த கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷிணி பேசியதாவது:
நான் ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தேன். பிளஸ் 2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன். வகுப்பு துவங்கும் முன்பே பள்ளிக்கு சென்றுவிடுவேன். சிவில் சர்வீஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை சிறுவயது முதலே இருந்தது. தொடர் முயற்சியால் குருப்-1 தேர்வில் வெற்றி பெற்று உங்கள் முன் ஒரு அதிகாரியாக நின்று பேசுகிறேன். படிப்பு என்பது எனக்கு கிடைத்த ஏணி. அதனால்தான் இன்று அதிகாரியாக இந்த மேடையை அலங்கரிக்கிறேன். இதை அனைத்து மாணவர்களும் உணர்ந்து படிக்க வேண்டும். நாம் படிக்க யாரும் ஊக்கமளிக்க மாட்டார்கள். நாமாக படித்தால் மட்டுமே வாழ்க்கையில் வளர்ச்சி பெற முடியும். குறிக்கோள் இல்லாமல் நீங்கள் எதிர்காலத்தில் முன்னுக்கு வரமுடியாது.இவ்வாறு அவர் பேசினார்.
