பழங்குடியினர் நலன்: அரசுகளுக்கு ஜனாதிபதி முர்மு அறிவுரை
பழங்குடியினர் நலன்: அரசுகளுக்கு ஜனாதிபதி முர்மு அறிவுரை
UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM
ADDED : ஜூலை 04, 2023 03:39 AM
ஜனாதிபதி திரவுபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூரு வந்தார். கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். கர்நாடக எஸ்.டி., துறை சார்பில், பெங்களூரு ராஜ்பவனில் நேற்றிரவு ஏற்பாடு செய்திருந்த பழமையான பழங்குடியின மக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. மைசூரு, சாம்ராஜ்நகர், குடகு, உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பழமையான பழங்குடியினத்தை சேர்ந்த 44 பேர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.அவர்கள் மத்தியில் ஜனாதிபதி பேசுகையில், பழங்குடியின மக்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பணிபுரிய வேண்டும். பழங்குடியின மக்களுக்கு அரசு ஒரு அடி எடுத்து வைத்து வழிகாட்டினால், மெதுவாக நடக்கவும், படிப்படியாக ஓடவும் கற்று கொள்வர். எஸ்.எஸ்.எல்.சி., படித்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பதை ஊக்குவித்தால் பயனடைவர். சிறுவயதில்,எனக்கு அதிக வசதிகள் இல்லாவிட்டாலும், என் தந்தை கல்வி கற்பித்ததால் இந்த நிலைக்கு வர முடிந்தது, என்றார்.பின், பழங்குடியின மக்கள் அமர்ந்திருந்த இருக்கை பகுதிக்கே சென்று ஜனாதிபதி கலந்துரையாடினார். அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை. உடனிருந்த எஸ்.டி., துறை அமைச்சர் நாகேந்திரா உதவினார். மேலும், ஜனாதிபதி மாளிகையில் இருந்து கொண்டு வந்த பரிசு பொருட்களை திரவுபதி முர்மு, வழங்கி சிறப்பித்தார். பழங்குடியினரும் தங்கள் கைகளால் செய்த பரிசு பொருட்களை ஜனாதிபதிக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
