தொழில்நுட்பங்களை கற்றுத்தரும் கல்லுாரிகளுக்கு முன்னுரிமை
தொழில்நுட்பங்களை கற்றுத்தரும் கல்லுாரிகளுக்கு முன்னுரிமை
UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM
ADDED : ஜூலை 04, 2023 03:42 AM
மதுரை:
பாடங்களை தாண்டி வேலை வாய்ப்புக்கான தொழில் நுட்பங்களை கற்றுத்தரும் கல்லுாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மதுரை, சிவகாசியில் தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கினர்.காலையில் சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியிலும், மாலையில் மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியிலும் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்வியாளர்கள் பேசியதாவது:
கல்லுாரிக்கு முன்னுரிமை
சுப்புராஜ், தலைவர் மாணவர் சேர்க்கை துறை கோவை கற்பகம் கல்வி நிறுவனங்கள்:
மாணவர்கள் நலன் கருதி சமூக நோக்கத்தில் தினமலர் பல ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் 450 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பல்வேறு படிப்புகள் குறித்து எந்த கல்லுாரி, எந்த படிப்பை தேர்வு செய்வது என்பது முக்கியம். பெரும்பாலான மாணவர்களின் உயர்கல்வி தவறான கல்வி வழிகாட்டுதலால் திசை மாறிவிடுகிறது. இன்ஜினியரிங் துறையில் ஒவ்வொரு துறை வளர்ச்சியும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து தான் வருகின்றன. அதை அறிந்து சரியான படிப்பை தேர்வு செய்தால் தான் நல்ல வேலை கிடைக்கும். படிப்பை விட கல்லுாரியை தேர்வு செய்வதில் முன்னுரிமை கொடுத்தால் வேலை வாய்ப்புக்கு உத்திரவாதம் கிடைக்கும்.இன்ஜி., கவுன்சிலிங் நடைமுறைகள் என்ன
நாகராஜன், முன்னாள் இயக்குனர், மாணவர் சேர்க்கை பிரிவு, சென்னை அண்ணா பல்கலை:
கவுன்சிலிங்கிற்கு காத்திருக்கும் 1.75 லட்சம் மாணவர்கள் அனைவருக்கும் தரவரிசை விவரம் வந்திருக்கும். கவுன்சிலிங் நடக்கும் நாட்கள் விவரம் விரைவில் வெளியாகவுள்ளது. கவுன்சிலிங் நான்கு கட்டங்களாக நடக்கும். முதற்கட்ட கவுன்சிலிங்கில் 1 முதல் 25 ஆயிரம் தரவரிசை உள்ள மாணவர்கள் அழைக்கப்படுவர். இவர்களுக்கு பெரும்பாலும் முன்னணி ரேங்க் உள்ள கல்லுாரிகள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. விண்ணப்பிக்கும்போது ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பிக்கும் போது பின்பற்றிய யுசர் நேம், பாஸ்வேர்டை மாணவர்கள் கடைசி வரை மறந்துவிடக் கூடாது. முதலில் சாய்ஸ் பில்லிங் என்ற விருப்ப பாடங்கள், கல்லுாரிகளை முடிந்தளவு அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யலாம். பின் அவற்றை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே பெயரில் பல கல்லுாரிகள் இருப்பதால் கல்லுாரி கோடு எண்ணை நினைவில் வைத்திருத்தல் அவசியம். சாய்ஸ் பில்லிங்கிற்கு பின் மூன்று நாட்களில் லாக் செய்தால் நான்காவது நாளில் தற்காலிக ஒதுக்கீடு செய்யப்படும். இதை மாணவர்கள் கட்டாயம் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதன்பின் இறுதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒதுக்கீடு வேண்டாம் என்ற நிலையில் அப்வேர்டு மூவ்மென்ட்டிற்கு விருப்பம் தெரிவித்து வைப்பது நல்லது. ஒதுக்கீடு பெற்ற 5 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த பெற்றோர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.திறமைகளை வளர்க்க இலக்கு
ஸ்ரீராம், தலைவர் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி: அதிக மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றும் தவறான கல்லுாரிகளை தேர்வு செய்துவிடுகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழுடன் இணைந்து நடத்துகிறோம். இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மாணவர்களிடையே 3 ஆண்டுகளாக ஆர்வம் அதிகரித்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிசியல் இன்டலிஜென்ட்ஸ், சைபர் செக்கியூரிட்டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிசினஸ் சிஸ்டம் உள்ளிட்ட பிரிவுகளை விரும்புகின்றனர்.ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் டெவலப்மென்ட் சிஸ்டம் சென்டர்களை இந்தியாவில் துவங்கியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்நிறுவனங்களுக்கு ஏராளமான இன்ஜினியர்கள் தேவைப்படுவர். பிளஸ் 2 வரை மதிப்பெண் கைகொடுக்கும். ஆனால் இன்ஜினியரிங் சேர்ந்துவிட்டால் வேலைக்கான திறமைகளை வளர்த்துக்கொண்டால் தான் எதிர்காலம் இருக்கும். சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இதுபோல் 30க்கும் மேற்பட்ட வேலைக்கான திறமைகளை கற்றுக்கொடுக்கிறோம். 40 சதவீதம் மாணவர்கள் படிக்கும் போதே நிறுவனங்களில் உதவித்தொகையுடன் &'இன்டன்ஷிப்&' பெறுகின்றனர். படிக்கும் போதே எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும்; அதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ளும் இலக்கு மாணவர்களுக்கு வேண்டும்.வாய்ப்புகள் மிகுந்த இன்ஜி., பிரிவுகள் எவை
ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்:
படிப்பை முடித்து வெளியேறும் 2027 ல் எந்த துறைகள் வளர்ச்சியுடையதாக இருக்கும் என்பதை அறிந்து பாடப்பிரிவுகளை தேர்வுசெய்ய வேண்டும். உலகம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பல வகை டூல்ஸ்கள் (ஏஐ டூல்ஸ்) பயன்பாடு அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. யூபிக், ஸ்மெலிங் சென்சார் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இனிவரும் உலகை ஆளப்போகின்றன. அதற்கேற்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்து திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது ஐ.டி.,யில் வேலைவாய்ப்பு குறைந்துவரும் நிலையில், எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூனிகேஷனுடன் கம்யூட்டர் டெக்னாலஜி படிப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஏடு டூல்ஸ், கோடிங் டெக்னாலஜிகளை கற்றுக்கொள்ள வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் அட்வான்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டிஜிட்டல், ஆர்டிபிஸியல் இன்டெலிஜென்ஸ் அன்ட் டேட்டா சயின்ஸ், செமி கண்ட்க்டர் டெக்., கோடிங் டெக்.,, புராம்ப்ட் டெக்., மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ் போன்ற படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. என்.ஐ.ஆர்.எப்., பெற்ற அல்லது நாக், என்.பி.ஏ., அங்கீகாரம் உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். பாடத் திட்டங்களை தாண்டி திறமைகளை வளர்த்துக்கொண்டால் தான் வேலையும், நல்ல சம்பளமும் கிடைக்கும்.இவ்வாறு பேசினர்.இந்நிகழ்ச்சியை கோவை கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ் இணைந்து வழங்கியது.
