UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM
ADDED : ஜூலை 06, 2023 09:31 AM
கோவை:
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிலபஸ் கையாள, தகுதியான தற்காலிக ஆசிரியர்கள் கிடைக்காமல் தவிப்பதாக, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. மாற்று ஏற்பாடாக, தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்கதையாகி வருகிறது. இக்கல்வியாண்டுக்கு, பள்ளி மேலாண்மை குழு மூலம், தகுதியானவர்களை நியமித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், பட்டதாரி ஆசிரியருக்கு 12 ஆயிரம் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம், 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெட் முடித்தவர்களுக்கு, முன்னுரிமை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் கிடைப்பதில்லை என தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர். குறிப்பாக மற்ற வகுப்புகளை காட்டிலும், பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிலபஸ் அதிகம். நிரந்தர ஆசிரியர்களே திணறும் நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் போதிய பயிற்சி இல்லாமல் வகுப்பு கையாள முடியாது. அதனால் காலியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை விரைந்து நியமிப்பதே தீர்வு என, பலரும் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் அருளானந்தம் கூறுகையில், டெட் முடித்து விட்டு, தனியார் பள்ளிகளில் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, அரசு பள்ளிகளுக்கு தற்காலிக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு கையாள்தல், சிலபஸ் முடித்தல், செய்முறை தேர்வுகளுக்கு தயார்படுத்துதல், உடனடி பொதுத்தேர்வுக்கு பயிற்சி வழங்குதல் என, பல்வேறு பணிச்சுமை உள்ளதால், தற்காலிக பணிக்கு ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. சிலர் கல்வியாண்டு முடியும் வரை, பணியை தொடராததால், அடிக்கடி ஆசிரியர்கள் மாறும்போது, மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நிரந்தர ஆசிரியர்கள் நியமிப்பதே, சரியான தீர்வாக இருக்கும், என்றார்.
