UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM
ADDED : ஜூலை 22, 2023 09:42 AM
கோவை:
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் நடத்தப்படும், ஏழாவது புத்தக திருவிழா, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் துவங்கியது.பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கியபதிப்பாளர்கள், 330க்கும் மேற்பட்ட அரங்குகளில், லட்சக்கணக்கான தலைப்புகளில், புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். புத்தக திருவிழாவை துவக்கி வைத்து கலெக்டர் கிராந்திக்குமார் பேசியதாவது:
இன்றைக்கு கூகுளில் தேடினால், பல தகவல்களை பெறமுடியும். விரும்பிய புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். ஆனால் புத்தகம் வாங்கி படிப்பதில் கிடைக்கும் அறிவும், அனுபவமும் வேறெதிலும் கிடைக்காது. முழுமையாக ஒரு விஷயத்தை, புத்தகங்கள் வழியாகதான் தெரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.மொழிபெயர்ப்பு பிரிவில், எழுத்தாளர் அருட்செல்வப் பேரரசனுக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும், கவிதை பிரிவில் கவிஞர் மலர்விழி (ஜூடாஸ் மரம்), புனைவு பிரிவில் எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பன் (சிருங்காரம்) ஆகியோருக்கும், இளம் படைப்பாளர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கவிஞர் கவிதாசன், கொடிசியா தலைவர் திருஞானம், கவுரவ செயலாளர் சசிகுமார், புத்தகத் திருவிழா துணைத் தலைவர் ராஜேஷ், தொழிலதிபர் டி.பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காட்சி வரும் 30ம் தேதி வரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெற உள்ளது.
