பொதுத்தேர்வு தேர்ச்சி குறைந்த பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
பொதுத்தேர்வு தேர்ச்சி குறைந்த பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM
ADDED : ஜூலை 24, 2023 09:14 AM
மதுரை:
மதுரையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 70 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கப்படும் என தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் சி.இ.ஓ., கார்த்திகா எச்சரித்தார்.மாவட்டத்தில் அரசு, உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு எமிஸ் பதிவேற்றம் தொடர்பான இணையவழி ஆலோசனை கூட்டம் கார்த்திகா தலைமையில் நடந்தது. டி.இ.ஓ.,க்கள் முரளி, முத்துலட்சுமி பங்கேற்றனர்.கார்த்திகா பேசியதாவது:
மாணவர்கள் பெற்ற நலத்திட்டங்கள் தொடர்பான விவரங்கள் முறையாக எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் உயரம், எடை, கண் பிரச்னை, ரத்த சோகை உள்ளிட்ட உடல்சார்ந்த பிரச்னை விவரங்களும் குறிப்பிட வேண்டும். இதுவரை எத்தனை மாணவர்களுக்கு பஸ் பாஸ்கள் பெறப்பட்டது. நிலுவையில் உள்ள பாஸ்கள் எண்ணிக்கை விபரம் பதிவேற்றம் செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 70 சதவீதம் தேர்ச்சி குறைந்த அரசு, உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.இந்தாண்டு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி குறைவால் மாநில ரேங்க் பட்டியலில் மதுரை மாவட்டம் பின்தங்கியது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படும் என்ற கல்வித்துறை முடிவுக்கு ஆசிரியர்களிடையே ஆதரவும், விமர்சனமும் எழுந்துள்ளது.
