UPDATED : ஆக 01, 2023 12:00 AM
ADDED : ஆக 01, 2023 09:39 AM
புதுச்சேரி:
உலகில் அழிந்து வரும் இயற்கை வளங்களை பற்றி தோல்பாவை கூத்து வழியாக பாண்டி மெரினாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.புதுச்சேரி ஜீவராசி இயற்கை பள்ளி சார்பில், இயற்கை வள காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. லட்சுமணராவ் குழுவினர் தோல்பாவை கூத்தினை நிகழ்த்தினர். மெரினாவில் திரண்டு இருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டுகளித்தனர். உயிரற்ற பாவைகளை, உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி நிகழ்த்தப்படும் தோல்பாவை கூத்தின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. நாகரிக வளர்ச்சி மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் சினிமா, டி.வி., மொபைல் போன்றவற்றின் ஆதிக்கத்தால் பாரம்பரிய கலையான தோல்பாவை கூத்து அழிவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. உரிய அங்கீகாரம் கிடைக்காததால் கலைஞர்களும் நலிவடைந்துள்ளது குறித்து விளக்கப்பட்டது.அடுத்த நுாற்றாண்டில் இதுபோன்ற கலைகள் இருந்ததற்கான சுவடுகள் கூட இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற கவலையும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் சகட்டுமேனிக்கு அழிக்கப்படும் இயற்கை வளங்கள் குறித்து தோல்பாவை கூத்து வழியாக விளக்கப்பட்டது. இயற்கையின் அழிவு என்பது மனிதகுலத்தின் அழிவு தான். இயற்கை வளங்களை எந்த தொழில்நுட்பத்தினைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது. இயற்கைவளங்களின் துணையின்றி மனிதகுலம் வாழ்வதும் சாத்தியமில்லை. எனவே ஒவ்வொருவரும் தனது கடமை உணர்ந்து, இயற்கை வளங்களை காக்க கைகோர்க்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஜீவராசி டிரஸ்ட் நிறுவனர் மேத்தா தட்சிணாமூர்த்தி, இணை இயக்குனர் சரஸ்வதி ஆகியோர் செய்திருந்தனர்.
