தேர்தல் பணியில் ஆசிரியர்கள் நியமனம் குறித்து சுற்றறிக்கை
தேர்தல் பணியில் ஆசிரியர்கள் நியமனம் குறித்து சுற்றறிக்கை
UPDATED : ஆக 04, 2023 12:00 AM
ADDED : ஆக 04, 2023 09:27 AM
பெங்களூரு:
தேர்தல் பணிக்கு ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக, கர்நாடக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பொதுவாக தேர்தல் பணிகளுக்கு கல்வி, போலீஸ் உட்பட பல துறைகளின் அதிகாரிகள், ஊழியர்களை நியமிப்பது வழக்கம். வாக்காளர் பட்டியல் ஆய்வு, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஓட்டுச்சாவடி பணிகள் என தேர்தல் தொடர்பான பணிகளுக்கு பெரும்பாலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. வரும் நாட்களில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல், லோக்சபா தேர்தல் வருகின்றன.இந்த தேர்தல் பணிகளுக்கு, தொடக்க, உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கூடாது என, மாநில தேர்தல் ஆணையத்திடம், கல்வித்துறை கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்திருந்தது. இதை மனதில் கொண்டு, மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாவட்ட அளவில் ஆசிரியர்களை, தேர்தல் பணிகளுக்கு நியமிக்கும் போது, சில உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்.* எந்த பள்ளியிலும் அனைத்து ஆசிரியர்களையும் தேர்தல் பணிக்கு நியமிக்க கூடாது* ஆசிரியர்களை நியமிக்கும் போது விடுமுறை நாட்களிலும், வகுப்பு நடக்கும் நேரத்தை தவிர்த்து, தேர்தல் பணிக்கு நியமிக்க வேண்டும்* உடல்நல பிரச்னைகள் உள்ள ஆசிரியர்களை, நியமிக்க கூடாது* ஓய்வு பெற ஆறு மாதமே இருக்கும், வயதான ஆசிரியர்களை நியமிக்க கூடாது* ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு நியமிக்கும் போது, தற்போது பிறப்பித்த உத்தரவு, இந்திய தேர்தல் ஆணையம், காலா காலத்துக்கு பிறப்பிக்கும் உத்தரவு, நெறிமுறைகளை தேர்தல் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
