மருத்துவ கல்லுாரியில் சேர்ந்து அரசு பள்ளி மாணவர் அசத்தல்
மருத்துவ கல்லுாரியில் சேர்ந்து அரசு பள்ளி மாணவர் அசத்தல்
UPDATED : ஆக 12, 2023 12:00 AM
ADDED : ஆக 12, 2023 04:04 PM
அன்னுார்:
அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர ஆணை பெற்றுள்ளார்.தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கிறது. இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 486 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அன்னுார் அருகே குன்னத்துாராம் பாளையத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளியான லோகநாதன் சுசிலா தம்பதியின் இளைய மகன் முகிலன், அரசு ஒதுக்கீட்டில் பெருந்துறையில் உள்ள நந்தா மருத்துவக் கல்லூரியில் சேர ஆணை பெற்றுள்ளார். இவர் 2022ம் ஆண்டு அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2தேர்வு எழுதி 600க்கு 511 மதிப்பெண் பெற்றுள்ளார். நீட் தேர்வில் 185 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.இதை அடுத்து ஓராண்டு சிறப்பு பயிற்சி பெற்று நடப்பாண்டு நீட் தேர்வு எழுதி 360 மதிப்பெண் பெற்றுள்ளார். இதையடுத்து பொது கலந்தாய்வில் பங்கேற்று அரசு ஒதுக்கீட்டின் கீழ் பெருந்துறையில் நந்தா மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான ஆணை பெற்றுள்ளார். தனியார் கல்லூரியின் கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னுார் அரசு பள்ளியில் படித்து மருத்துவ படிப்பில் சேர ஆணை பெற்றுள்ள முகிலனுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
