கல்லுாரி தேர்வு முடிவில் குளறுபடி: சிதம்பரம் மாணவர்கள் மறியல்
கல்லுாரி தேர்வு முடிவில் குளறுபடி: சிதம்பரம் மாணவர்கள் மறியல்
UPDATED : ஆக 15, 2023 12:00 AM
ADDED : ஆக 15, 2023 03:58 PM
கிள்ளை:
சிதம்பரம் அருகே சி.முட்லுர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள, குளறுபடிகளை சரிசெய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கல்லூரியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த மே மாதம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், நடைபெற்ற தேர்வு முடிவுகள் கடந்த 15 நாட்களுக்கு, முன் வெளியானது. அதில், தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு, ஆப்சென்ட் எனவும், பலருக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், தேர்வு முடிவுகளை சரி செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லுாரி முன்பு, கடலுார் புறவழிச்சாலையில் காலை 11:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியில் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த கிள்ளை போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லுாரி நிர்வாகத்திடம் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், 12:00 மணியளவில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், சிதம்பரம்- கடலுார் புறவழிச்சாலையில், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
