விருது பெறும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
விருது பெறும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
UPDATED : செப் 05, 2023 12:00 AM
ADDED : செப் 05, 2023 10:16 AM
ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இதையொட்டி சிறந்த பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை நாடு முழுதும் தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.நடப்பாண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது, உயர் கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுதும் 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த, 12 ஆசிரியர்கள் என மொத்தம், 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.இதில், தமிழகத்தின் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேளம்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் இன்று புதுடில்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் ஆசிரியர் தின விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். முன்னதாக, விருது பெற உள்ள ஆசிரியர்களை, புதுடில்லியில் உள்ள தன் வீட்டிற்கு நேற்று அழைத்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.அப்போது அவர் பேசியதாவது:
ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பை கொண்டாடுவதே, நல்லாசிரியருக்கான விருது வழங்கப்படுவதன் நோக்கம் ஆகும். ஆசிரியர்கள், நம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர். மாணவர்களின் கல்வித்தரத்தை மட்டுமின்றி, அவர்களின் வாழ்வை வளப்படுத்துவதிலும், ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என்பதை கவுரவிக்கவும், இந்த விருது வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
