UPDATED : செப் 06, 2023 12:00 AM
ADDED : செப் 06, 2023 11:06 AM
பெங்களூரு:
கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யு.சி., இரண்டாம் ஆண்டு வகுப்புகளுக்கு ஆண்டுக்கு ஒரு பொதுத்தேர்வு என்ற நடைமுறை மாற்றி, ஆண்டுக்கு மூன்று இறுதித்தேர்வு என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது என பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.கர்நாடகாவில் தற்போது எஸ்.எஸ்.எல்.சி., பி.யு.சி., இரண்டாம் ஆண்டு வகுப்புகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூலையில் துணைத் தேர்வு நடத்துவது வழக்கம். அதிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்தாண்டு வரை காத்திருக்க வேண்டும். இதனால், ஓராண்டு காலம் வீணாகிறது. இந்நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்துள்ள காங்கிரஸ் அரசு, கல்வித் துறையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அமைச்சர் மது பங்காரப்பா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
கர்நாடகாவில் புதிய கல்வி முறை கொண்டு வரப்பட உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பி.யு.சி., இரண்டாம் ஆண்டு வகுப்புகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இனி ஆண்டுக்கு மூன்று தேர்வுகள் நடத்தப்படும். அதாவது, இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அதே ஆண்டில் மேலும் இரண்டு முறை தேர்வு நடத்தப்படும். இதன் மூலம் ஓராண்டு காலம் காத்திருக்கத் தேவையில்லை. மேலும், முதல் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று நினைத்தால், அத்தகைய மாணவர்கள், அடுத்தடுத்து நடக்கும் தேர்வில் மீண்டும் எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.இந்த புதிய நடைமுறை, 2023 - 24ம் கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தப்படும். துணைத் தேர்வு என்பதை நீக்கிவிட்டு, ஆண்டு இறுதித் தேர்வு - 1, 2, 3 என்று அழைக்கப்படும். இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். விரைவில் விதிகள் தயாரித்து அதிகாரப்பூர்வமாக சுற்றறிக்கை வெளியிடப்படும். வகுப்புகள் துவங்கிய பின், பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வழிவகை செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
