UPDATED : செப் 13, 2023 12:00 AM
ADDED : செப் 13, 2023 05:02 PM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், மாவட்ட அளவிலான கலை உற்சவம் போட்டி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மற்றும் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 பயிலும் மாணவ- மாணவியர் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், தனி நடிப்பு, என, 10 பிரிவுகளில் தனித்தனியே போட்டி நடத்தப்பட்டது.இதில், 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 20 மாணவ - மாணவியர், அடுத்த மாதம் சேலத்தில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிக்கான ஏற்பாட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிசெல்வி செய்திருந்தார். ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் தனசேகரன் போட்டியை துவக்கி வைத்தார். சிங்காடிவாக்கம், காரை, வையாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலாவல்லி, அனுசூயா, உஷாராணி ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.
