UPDATED : செப் 13, 2023 12:00 AM
ADDED : செப் 13, 2023 05:04 PM
சென்னை:
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்ட வருவாய் அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில், குறுவட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். சமீபத்தில், சென்னை வருவாய் மாவட்ட அளவில், 23 மண்டலங்களில் குறுவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.அனைத்து போட்டிகளிலும், முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ - மாணவியர், வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். அதன்படி, முதலாவதாக, வருவாய் மாவட்ட அளவிலான செஸ் போட்டி, எழும்பூர், டான்பாஸ்கோ பள்ளியில் நேற்று துவங்கியது.போட்டியை, எழும்பூர் எம்.எல்.ஏ., பரந்தாமன் மற்றும் பள்ளி தாளாளர் சேவியர் பாக்கியா, முதல்வர் மத்தேயஸ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சாமுவேல், சேவியர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.போட்டியில், 23 மண்டலங்களில் வெற்றி பெற்ற 560 மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர். போட்டிகள் மொத்தம் ஆறு சுற்றுகள் வீதம், ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல மற்றும் மாநில போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
