நிவாரணம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் சட்டக்கல்லுாரியில் ஐகோர்ட் நீதிபதி பேச்சு
நிவாரணம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் சட்டக்கல்லுாரியில் ஐகோர்ட் நீதிபதி பேச்சு
UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 10:57 AM
தேனி:
போக்சோ வழக்கில் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல், பிற வழக்குகளிலும் நிவாரணம் வழங்காதது குறித்து சட்டக்கல்லுாரி மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.தேனி அரசு சட்டக் கல்லுாரியில் சட்டக்கல்வி இயக்குனரகம், கல்லுாரி நிர்வாகம் சார்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கு குற்றவியல் நீதிமுறையின் அமைப்பு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. முதல்வர் கிருஷ்ணலீலா வரவேற்றார். இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி பேசியதாவது:
குற்றவாளிகளை எவ்வாறு தண்டிக்கலாம் என்று தான் குற்றவியல் சட்ட அமைப்பு உள்ளது. போக்சோ வழக்குகளில் யார் பாதிக்கப்பட்வர்களோ அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறை உள்ளது. இதுபோன்ற மற்ற குற்றவியல் சட்டங்களில் இல்லை. சட்டத்தின் இப்பகுதிகளை மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். குற்றங்களில் ஈடுபட்ட தண்டணை குற்றவாளிகளுக்கு கருணை மனு அளிக்க வழிவகை உள்ளது. ஆனால், அந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமை சரியான முறையில் சேரவில்லை என்பது நிதர்சனமான உண்மை.இதனால் நிறைய பேர் மன அழுத்தம், உளவியல் பிரச்னைகளுக்கு ஆளாகி நல்ல முறையில் வாழ முடியவில்லை. இதற்கான தீர்வுகள் குறித்தும் மாணவர்கள் ஆராய வேண்டும். எல்லோரும் அவர்களின் அடிப்படை கடமை என்ன என்பதை தெரிந்து அதை சரியாக செய்தால், அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும், என்றார்.பரிசு வழங்கல்:
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நீதிபதி பரிசுவழங்கினார். முன்னதாக இக்கருத்தரங்கில் மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி, உத்தமபாளையம் ஏ.எஸ்.பி., மதுகுமாரி, புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி உதவி பேராசிரியர் விஜயன், சட்டப்பல்கலையின் உதவி பேராசிரியை தீபாமாணிக்கம், திருச்சி தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலையின் செயற்குழு உறுப்பினர் தாழைமுத்தரசு உள்ளிட்டோர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். உதவி பேராசிரியர் பிரவீன் நன்றி தெரிவித்தார்.
