டெங்கு கண்டறிய கையடக்க கருவி ஐ.ஐ.டி., உதவியுடன் ஆராய்ச்சி
டெங்கு கண்டறிய கையடக்க கருவி ஐ.ஐ.டி., உதவியுடன் ஆராய்ச்சி
UPDATED : அக் 24, 2023 12:00 AM
ADDED : அக் 24, 2023 09:05 PM
சென்னை:
டெங்கு வைரஸ் கிருமியை உடனே கண்டறியும் கையடக்க கருவியை உருவாக்கும் ஆராய்ச்சியில், தமிழக அரசின், டேன்சம் எனப்படும், தமிழக நுண்திறன் மற்றும் மேம்பட்ட முறைக்கான திறன்மிகு மையம் ஈடுபட உள்ளது.சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள அரசு தலைமை மற்றும் தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ பரிசோதனையில், டெங்கு வைரஸ் உடனடியாக கண்டறியப்படுகிறது.விரைவான சிகிச்சை
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்படுகின்றன.அங்கிருந்து பரிசோதனை முடிவுகள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றன. அதன்பின்னரே, டெங்குகாய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், காலதாமதம் ஏற்படுவதால் சிகிச்சை நாட்கள் அதிகமாகின்றன.டிட்கோ எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், சீமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, சென்னை தரமணி, டைடல் பார்க் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில், டேன்சம் என்ற மையத்தை அமைத்துள்ளது.இந்த மையம், சென்னை ஐ.ஐ.டி., உடன் இணைந்து, டெங்கு வைரசை உடனே கண்டறியும் கையடக்க கருவியை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்று, கருவி பயன்பாட்டிற்கு வரும் போது, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிகிறது.இதன் வாயிலாக கிராமங்கள், மலைப்பகுதிகள் என, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வரும் நோயாளிகளுக்கு, டெங்கு வைரஸ் உடனே கண்டறியப்பட்டு, விரைவாக சிகிச்சை அளிக்க முடியும்.தொழில்நுட்பம்
இதுகுறித்து, தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், கையடக்க ஆய்வு கருவிக்கான தொழில்நுட்பத்தை தயாரித்துள்ளது. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, டெங்கு வைரசை உடனே கண்டறியும் கருவி உருவாக்கும் பணி துவக்கப்பட உள்ளது. இந்த ஆய்வு, 1.62 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
