தினமலர் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் அனா... ஆவன்னா எழுதிய மழலையர்
தினமலர் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் அனா... ஆவன்னா எழுதிய மழலையர்
UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 25, 2023 10:26 AM
மதுரை:
தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் சார்பில் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடந்த அனா … ஆவன்னா… அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சியில் 800 மழலையர்களும், அவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர்.மதுரையில் உள்ள சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. தினமலர் மாணவர் பதிப்பு சார்பில் அரை கிலோ அரிசி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பென்சில், விபூதி, குங்குமம், இனிப்பு, சில்வர் தட்டு வழங்கப்பட்டது. கோயில் அர்ச்சகர் தர்மராஜ் குருமந்திரம், கலைவாணி சரஸ்வதி ஸ்லோகம் சொல்லி ஆரம்பித்து வைத்தார்.தங்களது இஷ்டதெய்வம் அல்லது குலதெய்வத்தை வணங்கிய பெற்றோர்கள் மழலையரை மடியில் அமர்த்தி ஆட்காட்டி விரல் பிடித்து அரிசியில் ஓம் என்ற பிரணவத்தை எழுதினர். அடுத்து உயிரெழுத்தான அ எழுதி மழலையின் கல்விக்கான அடித்தளத்தை துவக்கி வைத்தனர்.800 குழந்தைகளின் பெற்றோர் பெயர்களை பதிவு செய்திருந்தனர். காலை 9:00 மணி முதல் 5 பேட்ச்களாக குழந்தைகள், பெற்றோர் அமரவைக்கப்பட்டு கல்வி கற்பிக்கப்பட்டது. சமஸ்தான நிர்வாக அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், கண்காணிப்பாளர் கணபதிராமன் ஏற்பாடுகளை செய்தனர்.தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் சார்பில் இந்நிகழ்ச்சியை ஆனந்தா அன்ட் ஆனந்தா, ஸ்ரீ நர்ஸிங் ஸ்வீட்ஸ் லிமிடெட், அருணாச்சலா அரிசி கடை அன்ட் ஓட்டல் இணைந்து வழங்கின. சீமா நோட்புக் சார்பில் நோட்டு, அம்மன் உணவகம் சார்பில் பால் பிரசாதம் வழங்கப்பட்டது.எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான். கல்வியின் துவக்கநாளான விஜயதசமியில் அரிச்சுவடி ஆரம்பித்து வைக்கி றோம். விஜயம் என்றாலே எல்லாவகையான வெற்றிகளையும் உள்ளடக்கியது. ஈடு இணையில்லாத வெற்றி என்று பொருள். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பர்.நவராத்திரி முடிந்து 10 வது நாளான விஜயதசமியில் எண்ணையும் எழுத்தையும் மழலையருக்கு கற்றுக் கொடுக்கிறோம். நெல் அல்லது நவதானியம் அல்லது அரிசியில் விரல் பிடித்து எழுதச் செய்வது மரபு. ஓம் என்ற பிரணவம், தமிழ்மொழியில் அ முதலெழுத்து கற்றுத் தந்தோம். 200 ஆண்டுகளுக்கு முன் திண்ணைப்பள்ளிக் கூடங்கள் இருந்தபோது ஆசிரியரிடம் அரிசி, தேங்காய், தட்சணை கொடுத்து அவரை வணங்கி கல்வி கற்றோம்.தற்போது கோயில்களிலும் விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுக்கிறோம். இறைவன் எழுத்தையும், அறிவையும், சமூக நல்லுறவையும் கற்றுத்தருவார். குழந்தைகளின் கல்வி, எதிர்காலமும் சிறப்பாக அமையும் என அர்ச்சகர் தர்மராஜ் கூறினார்.
