சிற்றுண்டி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
சிற்றுண்டி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 25, 2023 10:36 AM
உடுமலை:
பகல்நேர பாதுகாப்பு மைய குழந்தைகளுக்கு, சிற்றுண்டி வழங்குவதற்கான பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.ஒவ்வொரு வட்டாரத்திலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்க, பகல் நேர பாதுகாப்பு மையங்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் வாயிலாக செயல்படுகிறது.இம்மையங்களில், மாற்றுத்திறனாளி மற்றும் மனநல குறைபாடுள்ள, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.மையத்தில் சிறப்பு பயிற்றுனர்கள், உதவியாளர் மற்றும் பணியாளர் ஒருவரும் நியமிக்கப்படுகின்றனர். உடுமலை சுற்றுப்பகுதியில் உடுமலை மற்றும் குடிமங்கலம் வட்டாரங்களில் இந்த மையங்கள் உள்ளன.மையத்தில் பயிற்சி பெற்று, பல குழந்தைகள், பள்ளிக்கும் செல்கின்றனர். குழந்தைகளின் உடல்நலத்தை மேம்படுத்த மையங்களில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வந்தது.ஆனால் 2018 - 19 கல்வியாண்டிலிருந்து மாதம் ஆயிரம் ரூபாய் சிற்றுண்டிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின், அந்த தொகையும் நிறுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கென எந்த ஒதுக்கீடும் இந்த மையங்களுக்கு வழங்கப்படுவதில்லை. பள்ளிகளுக்கு வழங்கும் சத்துணவு மற்றும் காலை உணவு திட்டம் மட்டுமே, இந்த மையங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.குழந்தைகளுக்கான சிற்றுண்டியாக சுண்டல், பச்சை பயிறு, சிறுதானிய பிஸ்கெட்கள் வழங்குவதால் அவர்களின் உடல் நலம் மேம்படுகிறது. மேலும், சில குழந்தைகள் காலையில் நேரம் தாமதமாகியே மையங்களுக்கு வருவதால், காலை உணவு திட்டத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இத்தகைய குழந்தைகளுக்கும் சிற்றுண்டி அவசியமாக உள்ளது.பொருளாதார சூழ்நிலையில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தான், இந்த மையங்களில் அதிகளவில் உள்ளனர். இத்தகைய குழந்தைகளுக்கு, இவ்வாறு சத்துள்ள சிற்றுண்டி வகைகளை வழங்குவதால் பெற்றோரும் திருப்தியுடன் மையங்களுக்கு அவர்களை அனுப்புகின்றனர். பகல்நேர பாதுகாப்பு மையங்களில், மீண்டும் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
