நுாலக வசதியுடன் மேம்படுத்தப்படும் கிண்டி சிறுவர் பூங்கா
நுாலக வசதியுடன் மேம்படுத்தப்படும் கிண்டி சிறுவர் பூங்கா
UPDATED : அக் 27, 2023 12:00 AM
ADDED : அக் 27, 2023 10:16 AM
சென்னை:
சென்னையின் மைய பகுதியில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பு உடையது.இங்கு, பாம்பு உள்ளிட்ட 11 வகையான, 46 ஊர்வன உயிரினங்கள் உள்ளன. மேலும், ஒன்பது வகையான, 68 பாலுாட்டி உயிரினங்கள் மற்றும் 21 வகையான, 314 பறவை இனங்கள் உள்ளன. சென்னை மக்கள் மற்றும் சுற்றுலா வருவோர், இந்த பூங்காவை கண்டு செல்வர். இந்நிலையில், இந்த பூங்காவை மேம்படுத்த, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக, தமிழக அரசு, 20 கோடி ரூபாய் மற்றும் ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் சி.எஸ்.ஐ.ஆர்., நிதியில் 10 கோடி ரூபாய் என, மொத்தம் 30 கோடி ரூபாய் ஒதுக்கி பணி நடக்கிறது. தற்போது, 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. டிசம்பர் மாதத்தில் பணி முடிக்கும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேம்படுத்தப்படும் வசதிகள்
அகலம் 7 அடியில், 2 கி.மீ., துார நடைபாதை, 1 கி.மீ., துார மழைநீர் வடிகால், நீர்வீழ்ச்சி, செல்பி பாயின்ட், விளையாட்டு உபகரணங்கள், 2 உணவகங்கள், 3 கழிப்பறைகள், வன உயிரின சிகிச்சை மையம், மின்விளக்குகள், தண்ணீர் தொட்டிகள், டிஜிட்டல் பெயர் பலகை, கேமரா, பறவைகள் வாழ்விடத்திற்கான மரங்கள், வேடந்தாங்கல் போல் பறவை கூண்டு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.நுாலக வசதி
இங்கு, ஒரு நுாலகம் கட்டப்படுகிறது. இதில், வன உயிரினங்கள், பொது அறிவு மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வன உயிரினங்கள் குறித்து படித்து விட்டு, அதை நேரில் பார்க்கும்போது புது அனுபவத்தை கொடுக்கும் என, அதிகாரிகள் கூறினர்.
