ஆவணமாகும் பாறை ஓவியங்கள் ஆராய வல்லுனர் குழு அமைப்பு
ஆவணமாகும் பாறை ஓவியங்கள் ஆராய வல்லுனர் குழு அமைப்பு
UPDATED : அக் 28, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 10:48 AM
சென்னை:
தமிழகத்தில் உள்ள பழமையான பாறை ஓவியங்களை, தமிழக தொல்லியல் துறை ஆவணப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.பாறை ஓவியங்கள் அனைத்தும் புகைப்படம், வீடியோக்களாக பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் அவற்றை ஆராய, வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுஉள்ளது. அதில், தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், மானிடவியல் வல்லுனர்களான பக்தவத்சல பாரதி, செல்லபெருமாள், கலை வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன், புதுச்சேரியின் பிரெஞ்சு கல்விக் கழகத்தின் புவியியலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.தமிழகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் உள்ள நிலையில், இந்தாண்டுக்குள், 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள், ஒலி - ஒளி, அச்சு ஆவணங்களாக வெளியிடப்பட உள்ளன.இதுகுறித்து, பாறை ஓவிய ஆவணத் திட்ட வல்லுனர்கள் கூறியதாவது:உலகில் நாகரிகம் தோன்றும் முன், குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் தங்களின் பழக்க வழக்கங்கள், சடங்குகள், வேட்டையாடுதல், பொழுதுபோக்கு, போர்த் தொழில் நுணுக்கங்கள் உள்ளிட்டவற்றை, ஓவியங்களாக வரைந்தனர்.இந்த ஓவியங்களை ஆராய்வதில், உலக மானிடவியல் ஆய்வாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுஉள்ளனர். மனிதர்களின் பரிணாம வளர்ச்சி, ஆயுதங்களை கையாளும் முறை, உணவு முறை, குழு மனப்பான்மை, தாவர, விலங்கியல் சூழல் உள்ளிட்டவற்றை அறிய, இந்த பாறை ஓவியங்களே சான்றாக உள்ளன. பல இடங்களில், குவாரிகளாலும், விஷமிகளாலும் பாறை ஓவியங்கள் அழிக்கப்படும் நிலையில், தமிழக பாறை ஓவியங்கள் பற்றி ஆய்வு செய்வோருக்கு, இந்த ஆவணங்கள் பெரிதும் உதவும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
