UPDATED : அக் 28, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 11:00 AM
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு, கோதவாடியில் காலை மற்றும் மாலை நேரத்தில் பஸ் இயக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில், 2,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பொதுமக்கள் பெரும்பாலும், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்ல கிணத்துக்கடவு, கோவை மற்றும் பொள்ளாச்சி போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.கொரோனாவுக்கு முன், கோதவாடிக்கு கே 3 என்ற அரசு டவுன் பஸ் காலை, 7:45 மணி மற்றும், மாலை, 5:45 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனாவுக்கு பின், இந்த பஸ் வருவது இல்லை. இதனால், பள்ளி, கல்லுாரி முடித்து வீடு திரும்பும் மாணவர்களுக்கு, போதிய பஸ் வசதி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க, பொதுமக்கள் நலன் கருதி, இதே நேரத்திற்கு மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, ஊராட்சி தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:
கோதவாடிக்கு, 20 ஆண்டுகளாக, இயக்கப்பட்டு வந்த கே 3 பஸ், தற்போது காலை மற்றும் மாலை வேளையில் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பாதிப்படைந்துள்ளனர்.மேலும், கோதவாடியில் இருந்து வடசித்துார் செல்ல பஸ் வசதி வேண்டும். இதுபற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.பி.,யிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த பயனும் இல்லை. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, மீண்டும் பழைய படி பஸ் இயக்க வேண்டும்ல.இவ்வாறு, கூறினார்.
