நிலவில் பள்ளத்தை உருவாக்கிய விக்ரம் லேண்டர்: இஸ்ரோ தகவல்
நிலவில் பள்ளத்தை உருவாக்கிய விக்ரம் லேண்டர்: இஸ்ரோ தகவல்
UPDATED : அக் 30, 2023 12:00 AM
ADDED : அக் 30, 2023 09:19 AM
புதுடில்லி:
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியபோது சந்திரயான் -3 விண்கலம் 2.09 -டன் புழுதியை கிளப்பியதுடன் அங்கு மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கியதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் கடந்த ஜூலை 14ல் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து சந்திரயான் - 3 விண்கலம் நிலவிற்கு அனுப்பப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆக.23ல் திட்டமிட்டபடி வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. அப்போது அதிக உந்துசக்தியின் காரணமாக தரையிறங்கும்போது நிலவின் மேற்பரப்பில் உள்ள துகள்கள் அப்பகுதியில் சுற்றி பரவி புழுதியை உருவாக்கியது.
இதன் காரணமாக அங்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில், சந்திரயான் - 2 ஆர்பிட்டரில் உள்ள கேமராவில், லேண்டர் தரையிரங்குவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்களையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் எஜெக்டா ஹாலோ எனப்படும் பள்ளம் உருவாகியுள்ளதை இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர். மேலும் 2.09 டன் அளவிற்கு புழுதி படிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
