தலைவர், உறுப்பினர் நியமனங்கள் டி.என்.பி.எஸ்.சி.,யில் சீரமைப்பு அவசியம்
தலைவர், உறுப்பினர் நியமனங்கள் டி.என்.பி.எஸ்.சி.,யில் சீரமைப்பு அவசியம்
UPDATED : அக் 30, 2023 12:00 AM
ADDED : அக் 30, 2023 10:43 AM
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., 1929ம் ஆண்டு, மெட்ராஸ் சர்வீசஸ் கமிஷன் என்ற பெயரில் துவங்கப்பட்டு, தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டம், அட்டவணை, 320ன் படி செயல்பட்டு கொண்டிருக்கிறது.இந்த தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அரசால் தேர்வு செய்யப்பட்டு, கவர்னர் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகின்றனர். ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டிய டி.என்.பி.எஸ்.சி., தற்போது தலைவரே இன்றி, வெறும் 4 உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.10 உறுப்பினர் பதவி காலி
தற்போது, உறுப்பினர் முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக வகிக்கிறார். 10 உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகள், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையிலானவை என்பதால், அரசியல் தலையீடுகள் அதிகம்.டி.என்.பி.எஸ்.சி., சார்பில், அரசு துறைகளுக்கு ஆட்கள் தேர்வு மேற்கொள்ளும் முன், தங்களது உறுப்பினர் மற்றும் தலைவர் நியமனத்தை, வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என, தேர்வு எழுதுவோரும், கல்வியாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.செயல்பாட்டில் அதிருப்தி
இதுகுறித்து, தேர்வர்கள் மற்றும் பயிற்சி மைய நிர்வாகிகள் கூறியதாவது:
டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுகளின் நியமனங்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்கும் என்ற எண்ணத்தில், இளைய தலைமுறையினர் தங்கள் படிப்பை முடித்து, போட்டி தேர்வுக்கு கடுமையாக பயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் கடந்த காலங் களில் முறைகேடுகளும், விதிமீறல்களும் நடந்தது குறித்து, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.அதேநேரம், தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்திலாவது, வெளிப்படைத்தன்மை இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. அதிலும் அரசியல் ரீதியாகவும், பரிந்துரைகள் அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுகிறது.கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள் நியமனத்தில், உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை என, அப்போதைய எதிர்க்கட்சி தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. இதில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 11 உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது.தி.மு.க.,வின் முரண்பாடு
இந்நிலையில், வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்த தி.மு.க.,வே, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், அலட்சியமாக செயல்படுவது, இளைய தலைமுறையினரை ஏமாற்றுவதாக உள்ளது.தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் குறித்த அறிவிக்கை கூட, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. அதனால்தான், அரசின் பரிந்துரைகளுக்கு, கவர்னர் அனுமதி மறுத்துள்ளார்.அதேபோல், தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் நடத்தும் கூட்டங்களில், பணி நியமனங்கள் குறித்து என்ன முடிவெடுக்கப்படுகிறது; எத்தனை தேர்வுகள் அனுமதிக்கப்பட்டன. விதிமுறைகளில் மேற்கொண்ட மாற்றம் என்ன என்பது போன்ற விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்காமல், ரகசியமாக வைக்கப்படுகின்றன.இதுபோன்ற செயல்பாடுகளால், போட்டி தேர்வு மற்றும் பணி நியமனங்களில் நம்பகத் தன்மை இல்லாமல் போகிறது; நாள்தோறும் வழக்குகள்தான் அதிகரிக்கின்றன. எனவே, தேர்வாணைய கட்டமைப்பில் தேவையான சீரமைப்புகளை செய்ய, அரசு முன்வர வேண்டும்; இல்லாவிட்டால், கவர்னர் தலையிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
