சத்துணவு திட்டத்தை அதிகாரிகள் குழு கண்காணிக்க அறிவுறுத்தல்
சத்துணவு திட்டத்தை அதிகாரிகள் குழு கண்காணிக்க அறிவுறுத்தல்
UPDATED : அக் 30, 2023 12:00 AM
ADDED : அக் 30, 2023 10:46 AM
விழுப்புரம்:
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
காலை உணவு திட்டத்திற்காக, பள்ளி சமையலறை கட்டடங்களுக்குத் தேவையான அளவு குடிநீர், மின்சாரம் மற்றும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக வைத்திட இட வசதி உள்ளதை அதிகாரிகள் குழு உறுதி செய்ய வேண்டும்.காலை உணவு மற்றும் மதிய பணியாளர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏதும் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். உணவுப் பொருட்களின் தரம், சுத்தம் மற்றும் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்ய மாதாந்திரம் ஆய்வு அறிக்கையினை 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைத்து, அதில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பயன்படுத்த வேண்டும். நகராட்சி மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பு குழு கூட்டம் 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்தி, அறிக்கையினை அனுப்பி வைக்க வேண்டும்.காலை உணவு சமைத்தல், பரிமறுதல் நிகழ்வினை குறித்த நேரத்தில், காலை உணவு சமைக்கும் பணியாளர்கள் செயலியில் பதிவேற்றம் செய்வதை கண்காணிக்க வேண்டும். தரமான உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். உணவுப் பொருட்கள் தேவை பட்டியலினை மாதம் தோறும் 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும். உணவு பொருட்கள் தேவைப் பட்டியலின் படி, 25ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு வழங்கி முடிக்க வேண்டும்.பள்ளியளவில் கண்காணிப்பு குழு கூட்டம், வாரம் தோறும் நடத்த வேண்டும். மதிய உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கையினை செயலியில் 11:00 மணிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும். உணவு வழங்கும் நேரத்தில் தினம் ஒரு ஆசிரியர் கண்காகணித்து உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வதற்கான பட்டியலினை சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து களப்பணியாளர்களும் தினமும் 3 சத்துணவு மையங்களுக்குச் சென்று ஆய்வு செய்திட வேண்டும். துணை பி.டி.ஓ.,க்கள் 2 மாதங்களுக்குள் அனைத்து பள்ளி சத்தணவு மையங்களையும் பார்வையிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.
