UPDATED : நவ 09, 2023 12:00 AM
ADDED : நவ 09, 2023 11:53 AM
உடுமலை:
ஐ.ஏ.எஸ்., போட்டித்தேர்வுக்கான ஆயத்த பயிற்சியில் சேர மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில், மத்திய, அரசுகள் அவ்வப்போது போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சிகளை அளித்து வருகின்றன. பட்டதாரிகளும் இதில் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.அவ்வகையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அகில இந்திய ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் சார்பில், ஆண்டுதோறும், மீனவ பட்டதாரி இளைஞர் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஐ.ஏ.எஸ்., போட்டித்தேர்வுக்கான ஆயத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சியில் இணையலாம்.www.fisheries.tn.gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 18ம் தேதிக்குள், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மீனவ பட்டதாரி இளைஞர்கள், இந்த பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.
