UPDATED : நவ 15, 2023 12:00 AM
ADDED : நவ 15, 2023 05:21 PM
உலக சி.ஓ.பி.டி.,(நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் )தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3வது புதன்கிழமையாக இன்று (நவ.15) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு சுவாசமே வாழ்க்கை என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.உலகளவில் மூன்றாவது உயிர்க்கொல்லி நோயாக, இந்தியாவில் 2வது உயிர்க்கொல்லி நோயாக சி.ஓ.பி.டி., நோய் மாறிவருகிறது. சி.ஓ.பி.டி., என்பது நுரையீரலில் ஏற்படும் தொடர் வீக்கம். நுரையீரலிலிருந்து சுவாசக் காற்று தடைபடுவதால் சுவாசப்பிரச்னை ஏற்படுகிறது. இது தடுக்கக்கூடிய, சிகிச்சையளிக்கக்கூடிய நோய் தான். சி.ஓ.பி.டி.,யால் கண்டறியப்பட்டவர்கள் மூச்சுத்திணறல், இருமல் போன்ற சிரமங்களுடன் தினசரி வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.மூச்சுத்திணறல் அதிகரிப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. நுரையீரலில் இருந்து காற்று வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். ஆல்வியோலர் பைகள் (ஆக்சிஜன் பரிமாறும் இடம்) சேதமடையும்.குழந்தைகளுக்கு ஏற்படும் சி.ஓ.பி.டி.,
குழந்தைகள் முழுதாக வளர்ச்சியடைந்த நுரையீரலுடன் பிறப்பதில்லை. குழந்தை பிறந்து வளர்வது முதல் அக்குழந்தையின் 20 வயது வரையில் நுரையீரல் படிப்படியாக முழு வளர்ச்சியை அடையும். நுரையீரல் வளரும் போது குழந்தைகள் நச்சுப்புகையை சுவாசிக்க நேரிட்டால் அல்லது சுவாச தொற்று ஏற்பட்டால் நுரையீரலின் வளர்ச்சித் திறன் குறைந்துவிடும்.சராசரியாக 17 வயது கடந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நுரையீரல் செயல்பாடு குறைந்து கொண்டே செல்கிறது. வயதாகும் போது ஒரு சிலருக்கு நுரையீரல் செயல்பாடு குறைந்து சி.ஓ.பி.டி., நிலையை அடைந்து நுரையீரல் பாதிப்பை உண்டாக்குகிறது.காற்றில் உள்ள மாசுக்களை பொறுத்தே காற்றின் தரம் குறியிடப்படுகிறது. 0 முதல் 50 என்பது நம் வாழ்க்கைக்கு ஏற்ற சுத்தமான காற்று. 51 முதல் 100 என்பது மாசு காற்று, ஒரு சிலருக்கு சுவாசப்பிரச்னை ஏற்படலாம். 201 முதல் 300 மிகவும் மோசமாக உள்ள காற்று, அனைவருக்கும் சுவாச கோளாறை ஏற்படுத்தும். 300க்கு மேல் என்பது மிகவும் ஆபத்தான, அபாயமான சூழல் உள்ளதென அர்த்தம். டில்லியில் 300க்கு மேல் உள்ளதற்கு காரணம் விவசாயக்கழிவுகளை எரிப்பதும், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையும் தான். மதுரையில் காற்றின் தரக்குறியீடு 30 புள்ளி என்கிற அளவில் உள்ளது. இன்னும் குறைப்பதற்கு சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்த வேண்டும்.புகைபிடித்தல் முக்கிய காரணம்
தொடர்ந்து 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் புகை பிடித்தால் சி.ஓ.பி.டி., நுரையீரல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது. உலகளவில் 85 சதவீதம் பேர் புகையிலையால் தான் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் வெளியிடும் மாசு, புகை, தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப்புகையால் சுவாசப் பிரச்னை ஏற்படும். நிலக்கரி சுரங்கம், கட்டுமானம் மற்றும் கல் தச்சு தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். முகக்கவசம் அணிந்தால் ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு நிர்வாகமும் தொழிலாளர்களின் மீதான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுவாச சீரமைப்பு குறித்த பரிசோதனைகளை போதுமான கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும்.மூச்சுத்திணறல், நாள்பட்ட இருமல், சளி உற்பத்தி அல்லது அடிக்கடி குளிர்கால சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்பைரோமெட்ரி, சி.டி.ஸ்கேன், ரத்தப்பரிசோதனை மூலம் நோயை கண்டறியலாம். இன்ஹேலர் மற்றும் மருந்துகள் மூலம் சி.ஓ.பி.டி.,-யைக் கட்டுப்படுத்தலாம்.விழிப்புணர்வு தேவை
காற்றோட்டமாக இருக்கும் வகையில் வீடுகள் கட்டி செடி, கொடி, மரம் வளர்த்தால் சுத்தமான காற்று கிடைக்கும். தொழிற்சாலைகளில் புகை போக்கும் கருவிகளை காற்று மாசுபடாத வகையில் உயரமாக அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கு நுரையீரல் மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். இதுவே ஒருநல்ல சமுதாயத்தை உருவாக்கும். பள்ளிகளிலும் கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.
