தனியார் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அரசுப் பள்ளி: சர்ச்சையான விவகாரம்
தனியார் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அரசுப் பள்ளி: சர்ச்சையான விவகாரம்
UPDATED : நவ 15, 2023 12:00 AM
ADDED : நவ 15, 2023 05:28 PM
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், தனியார் கல்லுாரி சார்பில், உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திக்கொள்ள, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனுமதியளித்துள்ள சம்பவம், ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு, நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், முதுகலை ஆசிரியர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு, வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆசிரியர், பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி படுத்தும் வரை வழிகாட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் உயர்கல்வி நுழைவு தேர்வுக்கு பயிற்சி, கல்விக்கடன் பெறுவது உள்ளிட்டவை குறித்தும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில், தனியார் கல்லுாரி நிர்வாகம் ஒன்றுக்கு, கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்த, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கபீர் அனுமதியளித்துள்ளார். இது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசு பள்ளி வளாகத்தில் அரசு சாரா நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், சேலம் மாவட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும், பிப்., 29 வரை, தனியார் கல்லுாரி சார்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.ஏற்கனவே அரசு சார்பில் ஏராளமான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த தனியார் கல்லுாரி நிகழ்ச்சி தேவையா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. தங்கள் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விளம்பரமாகவே அவர்கள் பயன்படுத்திக்கொள்ள போகின்றனர். இதே வழியை பின்பற்றி, மற்ற கல்லுாரிகளும், வரிசையாக அரசு பள்ளிகளுக்குள் நுழைய போகின்றனர். இதனால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நேரம் வீணடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
