திருநங்கையர் குடியிருப்புகளின் தரம் ஐ.ஐ.டி., நிபுணர் குழுவினர் சோதனை
திருநங்கையர் குடியிருப்புகளின் தரம் ஐ.ஐ.டி., நிபுணர் குழுவினர் சோதனை
UPDATED : நவ 28, 2023 12:00 AM
ADDED : நவ 28, 2023 09:50 AM
செய்யூர்:
செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் திருநங்கையர் சரியான முறையில் வீட்டுமனை மற்றும் வீடுகள் இல்லாததால், பெரும் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, செய்யூர் அடுத்த கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சிவிளாகம் பகுதியில், அரசு சார்பாக வீடு இல்லாத 50 திருநங்கையருக்கு வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டு, இருளர் குடியிருப்பு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.தனியார் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியுதவியில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பாக, 50 திருநங்கையருக்கும், தலா 8.78 லட்சம் ரூபாய் என, மொத்தம் 4 கோடியே 39 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.பின், அரசு சார்பாக வீடுகளின் திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அவற்றை ஆய்வு செய்த கலெக்டர் ராகுல்நாத், அதே பகுதியில் இருளர்களுக்கு கட்டப்பட்டு வரும் 36 வீடுகளின் கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன், மொத்தமாக சேர்த்து திறப்பு விழா நடத்த முடிவு செய்தார்.இந்நிலையில், திருநங்கையருக்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள், தரமற்ற முறையில் கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு முன்பே, &'பேட்ச் வொர்க்&' செய்யப்பட்டு வருகிறது.மேலும், பேட்ச் வொர்க் செய்யப்பட்ட பல இடங்களில், சிமென்ட் பூச்சுகள் உடைந்து கொட்டுகிறது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளின் தரத்தை பரிசோதனை செய்து, பின் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிட்டப்பட்டது.அதன் விளைவாக, சென்னை ஐ.ஐ.டி.,யின் கியூபை சேர்ந்த 3 பேர் கொண்ட நிபுணர் குழுவினர், நேற்று தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தனர்.இதில், கட்டடத்தின் உறுதித் தன்மை, கட்டுமானப் பொருட்களின் தரம், கட்டடத்தின் அளவீடுகளை ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கை அரசிடம் அளிக்கப்படும் என, நிபுணர்கள் தெரிவித்தனர்.
