பொதுத்தேர்வில் இழந்த ரிசல்ட்ஐ மீட்டெடுக்க முதலிடம் பிடிக்க கல்வித்துறைக்கு உத்தரவு
பொதுத்தேர்வில் இழந்த ரிசல்ட்ஐ மீட்டெடுக்க முதலிடம் பிடிக்க கல்வித்துறைக்கு உத்தரவு
UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 10:09 AM
மதுரை:
அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் காலாண்டு தேர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. சி.இ.ஓ., கார்த்திகா முன்னிலை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் சாய் சுப்புலட்சுமி, முத்துலட்சுமி, மாநகராட்சி கல்வி அதிகாரி மாரிமுத்து, அரசு உயர், மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.காலாண்டு தேர்வில் 10 சதவீதம் அரசு பள்ளிகளே 70 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்றிருந்தது தெரிந்து கலெக்டர் அதிர்ச்சியடைந்தார். 50 சதவீதம் பள்ளிகளின் காலாண்டு தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்திற்கும் கீழ் இருந்தது.கலெக்டர் பேசியதாவது:
பொதுத்தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால் என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். குறிப்பாக ஓரளவு படிக்கும் மாணவர்களை பிரித்து அவர்களுக்கு தனியாக ஆசிரியர்கள் நியமித்து படிக்க வைக்க வேண்டும்.மாநில அளவில் பத்தாம்வகுப்பில் 20, பிளஸ் 2வில் 18 வது இடங்களுக்கு மதுரை சென்றுவிட்டது. இந்தாண்டு மீண்டும் முதல் 3 இடங்களுக்குள் இடம் பெற செய்து இழந்த பெருமையை மதுரை மீட்க வேண்டும் என்றார்.சி.இ.ஓ., கார்த்திகா பேசுகையில் ஜெ.இ.இ., நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் மதுரை 37வது இடத்தில் உள்ளது. மாணவர்களை அதிகம் விண்ணப்பிக்க வைக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அளித்துள்ள 7.5 சதவீதம்உள்ஒதுக்கீடு சலுகையில் பயனடையும் மாவட்டங்களின் பட்டியலில் மதுரை மிகவும் பின்தங்கியுள்ளது. இதை அதிகரிக்க செய்யவேண்டும் என்றார்.வெரி புவர்
கலெக்டர் பேசுகையில், தலைமை செயலர் தலைமையில் நடக்கும் துறைகள் வாரியான ஆய்வுக் கூட்டங்களில் துறைவாரியாக பெர்பார்மென்ஸ் பார்க்கப்படும். கல்வித் துறையில் மதுரை மிகவும் பின்தங்கியுள்ளது. வெரி புவரா இருக்கு. நான் கை கட்டி பதில் சொல்ல வேண்டியுள்ளது. இனிவரும் காலங்களில் இந்நிலை வரக்கூடாது என்றார்.
