UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 10:22 AM
பரம்பரை தொழில் எனப்படும் பல தொழில்கள், கல்வியோடு இணைந்ததன் விளைவாக, பலதரப்பட்ட மக்களும் செய்யக் கூடிய தொழிலாக, உருமாற்றம் பெற்றிருக்கின்றன. அந்த மாற்றம், மிகப்பெரும் தொழில் வாய்ப்பை கூட ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.அந்த வரிசையில், திருமுருகன்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில், கல் சிற்பத் தொழில், கொடி கட்டி பறக்கிறது. ஏற்கனவே, ஆன்மிக பூமியாக இருக்கும் அவிநாசி, பூண்டி பகுதிகளுக்கு இத்தொழில் கூடுதல் பெருமை சேர்ப்பதாகவே உள்ளது. பெரும்பாலும், பரம்பரை தொழிலாக மட்டுமே உள்ள இந்த சிற்பக்கலை, ஒரே குடும்பத்தின் நான்கைந்து தலைமுறைகளை தழுவியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.தனது, 13 வயது முதல், சிற்பம் செதுக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் மகாலிங்கம், 67 கூறியதாவது:
சிற்பம் செதுக்கும் கலை என்பது, பரம்பரைதொழிலாக தான் இருந்து வருகிறது. அந்த தொழில் செய்து வருவோரின் ரத்தத்துடன் அந்த கலை கலந்திருப்பதால், பல தலைமுறை தாண்டி, சிற்பக்கலையில் பல குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.இருப்பினும், சிற்பக் கலையில் ஆர்வமுள்ளவர்கள், இக்கலையை கற்றுக் கொள்வதில், எந்த தடையும் இல்லை. அவ்வாறு பயிற்சி பெறுபவர்கள் தொழில் முறை கலைஞர்களாக உருவெடுக்க முடியும்; வேலைவாய்ப்பு பெற முடியும்; வருமானம் ஈட்ட முடியும். இதற்கு அரசின் திட்டமிடல், ஊக்குவிப்பு என்பது, அவசியம்.தற்போதைய சூழலில், கோவில் கும்பாபிேஷகம் உள்ளிட்ட ஆன்மிகம் சார்ந்த விஷயங்கள் அதிகளவில் நடக்கின்றன; ஆன்மிக காரியங்களில் அதிகளவில் மக்கள் ஈடுபடுகின்றனர். கோவில் விழாக்களில், கூட்டம் குவிகிறது. இதனால், தெய்வங்களின் சிற்பம் செதுக்கும் தொழில், மேம்படும் வாய்ப்புள்ளது.அதே நேரம், கல்குவாரிகளில், கல் உடைத்து எடுப்பதில் உள்ள சில சிக்கல்கள், அதிகளவு மின் கட்டணம், மின் இணைப்பு பெறுவதில் உள்ள சில இடர்பாடுகள், தொழிலில் சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதற்கு, அரசு தீர்வு கண்டால், தொழில் செழிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
