UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 10:40 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில் 3 பிரிவுகளில் 44 பணியிடத்திற்கு நடந்த எழுத்து தேர்வில்,861 பேர் பங்கேற்றனர். இதில், 1027 பேர் ஆப்சென்ட் ஆகினர்.புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் வரைவாளர் 12 இடங்கள் (டிராப்மேன்) மற்றும் 27 நில அளவையாளர் (பில்டு சர்வையர்), 5 சுற்றுலா உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.புதுச்சேரி, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2 தேர்வு மையம், வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தேர்வுகள் நடந்தது.வரைவாளர் மற்றும் நில அளவையாளர் பணிக்கு புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியைச் சேர்ந்த 1,400 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். சுற்றுலா உதவியாளர் பணிக்கு 488 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.காலையில் வரைவாளர் மற்றும் நில அளவையாளர் பணிக்கான தேர்வு நடந்தது. இதில், விண்ணப்பித்த 1,400 பேரில், 633 பேர் மட்டுமே பங்கேற்று தேர்வு எழுதினர். 767 பேர் ஆப்சென்ட் ஆகினர்.மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சுற்றுலா உதவியாளர் பணிக்கு தேர்வு நடந்தது. விண்ணப்பித்த 488 பேரில் 228 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.260 பேர் ஆப்சென்ட் ஆகினர். ஒட்டுமொத்தமாக 3 பிரிவுகளில் 44 பணியிடத்திற்கு நடந்த தேர்வில் 1,888 பேரில், 861 பேர் 45.60 சதவீதம் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 1,027 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
