தட்டச்சு தேர்வுகளை 2 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வலியுறுத்தல்
தட்டச்சு தேர்வுகளை 2 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வலியுறுத்தல்
UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 04:34 PM
விருதுநகர்:
தமிழகத்தில் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு, செமஸ்டர் தேர்வுகளை கருத்தில் கொண்டு 2 நாட்களுக்குள் தட்டச்சு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்க மாநில தலைவர் சுரேஷ்குமார் கூறினார்.அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 4500 தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி பயிலகங்கள் உள்ளன. ஆண்டுக்கு 2 தேர்வுகளை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.25 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வு பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களின் கடைசி சனி, ஞாயிற்று கிழமைகளில் தான் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் 2024க்கான தட்டச்சு அரசு தேர்வை சனி, ஞாயிறு, திங்கள் என பிப். 24, 25, 26 ஆகிய 3 நாட்களில் நடத்துகின்றனர்.இதனால் மாணவர்களும், தட்டச்சு பள்ளிகளும் பாதிப்படைவர். 10ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி தேர்வு பிப். 23 முதல் 29 வரை நடக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கும் பிரி செமஸ்டர் தேர்வுகளும் நடக்கின்றன. பிப். 24, 25 ஆகிய 2 நாட்களிலேயே வழக்கம் போல் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாதிப்படைய மாட்டார்கள்.தட்டச்சு தேர்வில் பேட்ச் மாற்றம், விண்ணப்பங்களில் உள்ள சிறிய பிழைகளை திருத்தம் செய்ய ஜூனியர் கிரேடிற்கு ரூ.1000, சீனியர் கிரேடிற்கு ரூ.1300 என அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் மாணவர்களும், பெற்றோரும் பாதிக்கப்படுகின்றனர்.தட்டச்சு தேர்வு மையங்களை குறைந்தபட்சம் 10 கி.மீ., முதல் 60 கி.மீ., வரை தன்னிச்சையாக மாற்றியமைக்கின்றனர். நிரந்தரமாக உள்ள தட்டச்சு பள்ளிகளுக்கு நிரந்தரமான தேர்வு மையத்தை 3 கி.மீ., முதல் 5 கி.மீ.,க்குள் கல்லுாரிகளிலோ அல்லது பள்ளிகளிலோ அமைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தேர்வு மையத்தை மாற்றக்கூடாது. முறையான விவாதமின்றி புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த கூடாது என்றார்.
