ஆசிரியர்கள் தாக்கியதில் மாணவனுக்கு செவித்திறன் பாதிப்பு
ஆசிரியர்கள் தாக்கியதில் மாணவனுக்கு செவித்திறன் பாதிப்பு
UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 10:39 AM
மயிலாடுதுறை:
திருவாரூர் மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தாக்கியதில் மாணவனுக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த பாவட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமையன் மகன் பிரகதீஸ்வரன் (14). இவர் நெடுங்குளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரகதீஸ்வரன் கடந்த மாதம் 21ம் தேதி பள்ளியில் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மாணவர்கள் தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி, மாணவன் பிரகதீஸ்வரனை அழைத்து பிவிசி பைப் மற்றும் இரும்பு ராடு ஆகியவற்றால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு கை, கால், தோள்பட்டை மற்றும் காது ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவன் பிரகதீஸ்வரன் தலைமை ஆசிரியர் எழிலரசனிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் தலைமை ஆசிரியரும் மாணவனின் பேச்சை கேட்காமல், உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக பேசி பிரகதீஸ்வரனை தாக்கியுள்ளார். இதனால் மாணவன் அழுது கொண்டே வீட்டுக்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து பாவட்டகுடியில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை அளித்த அவரது குடும்பத்தினர், மறுநாள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் நீதி கேட்டுள்ளனர். இதையடுத்து மாணவனின் குடும்பத்தினரிடம் உங்கள் மகன் தப்பு செய்யவில்லை என்றும் மன்னிப்பு கேட்டு கொள்வதாக கூறிய தலைமை ஆசிரியர், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் உதவி தலைமை ஆசிரியரை பொறுப்பில் இருந்து நீக்கி, வேறொரு ஆசிரியரை உதவி தலைமை ஆசிரியராக நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மாணவன் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே உதவி தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பகையை மனதில் வைத்துக் கொண்டு, ஆசிரியர் ராதாகிருஷ்ணன் கடந்த 5ம் தேதி மீண்டும் வகுப்புக்கு சென்ற ஆசிரியர் மாணவன் பேசுவதாக கூறி மாணவன் தலையில் கையால் தாக்கியும் காது பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. ஆசிரியர் மாணவனை தாக்கியபோது தலை சுவற்றில் மோதியது. காது பகுதியில் இரண்டாவது முறையாக அடிபட்டதால் கடும் வலி ஏற்பட்டதுடன், ஒரு காதில் செவித்திறன் முற்றிலுமாக குறைந்து காது கேட்கவில்லை என மாணவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவன் பிரகதீஸ்வரர் நேற்று அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு காதில் வலி உள்ளதாக கூறுவதால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சை பெற பரிந்துரைத்துள்ளதாக கூறிய உறவினர்கள் எந்த காரணமும் இன்றி மாணவனின் செவித்திறன் பாதிக்குமளவிற்கு கொடூரமாக தாக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
