அரசு மருத்துவ கல்லூரி பணி முழுமை பெற... கூடுதல் நிதி தேவை!
அரசு மருத்துவ கல்லூரி பணி முழுமை பெற... கூடுதல் நிதி தேவை!
UPDATED : டிச 11, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 10:15 AM
ஊட்டி:
ஊட்டி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனைக்கு, இன்னும், 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினால் மட்டுமே பணிகள் முழுமை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், உயர்தர மருத்துவ வசதி இல்லாததால், இங்குள்ள மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக, கோவை மாவட்டம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் நிலை இருந்தது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, ஊட்டியில், 40 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய, மாநில அரசு பங்களிப்போடு, 447 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.இதற்கிடையில் நிறைவான கட்டுமானங்களில், மருத்துவக் கல்லுாரி திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை, 3 ஆண்டுகள் முடிந்து விட்டது. பல்வேறு காரணங்களால் இன்னும், கட்டுமான பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.அடுத்தாண்டு பிப்., மாதம் நான்காம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் ஆய்வுக்கு வர உள்ள நிலையில், அதற்குள், மருத்துவமனை பணிகளையும் முடித்தால்தான் அனுமதி கிடைக்கும் என்பதால், இறுதி கட்ட பணிகளை துரித கதியில் நடந்து வருகிறது.ரூ. 84 கோடி தேவை
பொது பணிதுறை செயற்பொறியாளர் அய்யாசாமி கூறுகையில், மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிகளை ஜன., 14ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதே சமயத்தில், மருத்துவ கல்லுாரி உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் தினசரி சராசரியாக, 17 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.இதற்காக, குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 25 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தவிர, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை சுற்றி தடுப்பு சுவர், பாலம் மற்றும் சாலை உள்ளிட்ட பணிகளுக்கு, 59 கோடி ரூபாய், என, மொத்தம், 84 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.இப்பணிகளுக்காக மாநில அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி வந் தால் மட்டுமே பணிகள் முழுமை பெறும் என்றார்.
