UPDATED : டிச 13, 2023 12:00 AM
ADDED : டிச 13, 2023 09:30 AM
பெரம்பலுார்:
பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களான வெங்கடேசன், 44, தீபா, 42, ஆகிய இருவரும் நவ., 15ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து, நவ. 18ம் தேதி, வெங்கடேசன் மனைவி காயத்ரி, தீபா கணவர் பாலமுருகன் கொடுத்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.கோயம்புத்துார், உக்கடம், லட்சுமிநரசிம்மர் கோவில் அருகே, தீபாவின் கார் நவ.30ல் நின்றது. காரில் இருந்து ரத்தக் கறையுடன் சுத்தியல், கத்தி, தீபாவின் தாலி குண்டு, கொலுசு, ஏ.டி.எம்., கார்டு, வெங்கடேசனின் இரண்டு மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றினர். வெங்கடேசனின் மொபைல் போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்ட கோயம்புத்துார், மதுக்கரை காந்தி நகரை சேர்ந்த மோகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.வெங்கடேசன், கோவையில் ஒரு கடையில் மொபைல் போன் வாங்கிய ஆதாரம் கிடைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனால், வெங்கடேசன் உயிரோடு இருக்க வாய்ப்புள்ளது. தீபா உயிருடன் இருப்பதற்கான எவ்வித தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.28 நாட்களாகியும் இருவரின் நிலை குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை. பெரம்பலுார், கோவை, தேனி மற்றும் கேரளா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று போலீசார் விசாரணை செய்தும் எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
