தமிழ்வழியில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்கவயலில் சங்கமித்து ஆலோசனை
தமிழ்வழியில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்கவயலில் சங்கமித்து ஆலோசனை
UPDATED : டிச 13, 2023 12:00 AM
ADDED : டிச 13, 2023 09:33 AM
தங்கவயல்:
தமிழ் வழியில் பாடம் கற்பித்த தங்கவயல் துாய தெரசா பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து புதிய அமைப்பை துவக்குவது குறித்து ஆலோசனை நடத்தினர்.ராபர்ட்சன் பேட்டை மூன்றாவது கிராசில் துாய தெரசா பள்ளி உள்ளது. இங்கு தமிழ் வழிக் கல்வியில் ஒன்று முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை இயங்கி வந்தது. ஆண்டு தோறும் 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், தமிழ் வழிக் கல்வியில் படித்து வந்தனர்.தற்போது இதற்கான மாணவர்கள் இல்லாததால், தமிழ்வழி கல்வி மூடப்பட்டுள்ளது. இதனால், ஆங்கில வழி பள்ளியாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்ற முன்னாள் மாணவர் மேத்யூஸ் மற்றும் அவரின் மாணவ நண்பர்கள் ஒருங்கிணைந்துள்ளனர்.இவர்கள், உரிகம் பயணியர் விடுதியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். சித்ரா, பிரியா, ஹேமா ஹேமலதா, சதீஷ், சிவகுமார், திருமுருகன், மகேஷ், தங்கராஜ், விக்டர், புரூஸ்லீ என, 35 பேர் கலந்து கொண்டு, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.அவர்கள் கூறுகையில், தமிழ் வழி கல்வி பயின்றோருக்கு தனி மரியாதை, கவுரவம் இருந்தது. இதனால் பிற மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களும், இப்பள்ளியில் தமிழில் தான் கல்வி பயின்றனர். இதில் வேற்றுமை பேதம் துளியும் கிடையாது. காலப்போக்கில் தமிழ் வழிக்கல்வி இல்லாமல் போனதால் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது என்றனர். இப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, தங்கள் குடும்பத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு வீடுகளில் தமிழ் கற்று கொடுக்கலாம். தமிழை கற்று கொடுக்க பொதுவாக வகுப்புகள் நடத்தலாம் என விருப்பம் தெரிவித்து உள்ளனர். துாய தெரசா பள்ளி முன்னாள் மாணவ - மாணவியர் ஒருங்கிணைந்து, மாணவர்கள் சங்க அமைப்பை துவக்குவது குறித்து ஆலோசனை நடத்தி, குழு போட்டோ எடுத்துக் கொண்டனர்.
