UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:04 AM
பல்லாரி:
சில நாட்களுக்கு முன், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்ட இருவர், பல்லாரி நகரின் கடையில் அமோனியம் நைட்ரேட் வாங்கியதை ஒப்புக் கொண்டனர்.தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., - ஐ.சிஎஸ்., பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புள்ள சிலர் தலைமறைவாக இருப்பதாக சந்தேகத்தின்படி, டிசம்பர் 18ல் பல்லாரி மற்றும் பெங்களூரில், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பல்லாரி, பெங்களூரில் தலா இருவர் கைது செய்யப்பட்டனர். இதில் பெங்களூரில் சட்ட பட்டப்படிப்பு படிக்கும் முகமது சுலைமான், பல்லாரியில் பி.சி.ஏ., மாணவர் சையத் ஆகியோர், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ள, முக்கிய குற்றவாளிகள் என்பது தெரிந்தது. இவர்களிடம் விசாரணை நடத்தியதில், பல விஷயங்கள் தெரிய வந்தன.சுலைமானும், சமீரும் நடப்பாண்டு அக்டோபரில், பல்லாரியின் உரக்கடை ஒன்றில், 1 கிலோ அமோனியம் நைட்ரேட் வாங்கினர். அதை பயன்படுத்தி சோதனை முறையில் வெடிகுண்டு தயாரிக்க திட்டமிட்டனரோ என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கல்லுாரி இளைஞர்களை, மூளை சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு ஈர்க்க, சமீர் முயற்சித்தது, விசாரணையில் தெரியவந்து உள்ளது.
