கழிப்பறை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர் பாடமாக திகழ்கிறார்
கழிப்பறை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர் பாடமாக திகழ்கிறார்
UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:04 AM
சாம்ராஜ் நகர்:
கோலார், பெங்களூரில் பள்ளி கழிப்பறைகளை மாணவர்களை சுத்தம் செய்ய வைத்த சர்ச்சைக்குள்ளான ஆசிரியர்கள் மத்தியில், கடந்த 13 ஆண்டுகளாக கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது குறித்து மாணவ - மாணவியருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாடமாக இருக்கிறார்.கோலார், பெங்களூரில் பள்ளி கழிப்பறையை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.துாய்மையே தெய்வீகம்
சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டுலுபேட்டில் உள்ள ஹொங்கஹள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் மஹாதேஸ்வரசாமி. இவர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை பரப்புபவர். துாய்மையே தெய்வீகம் என்று நம்புகிறார்.கழிப்பறையை நாமே சுத்தம் செய்தால், மாணவர்கள் அதை கற்றுக் கொண்டு வீட்டில் பார்த்து கொள்வர் என்கிறார். இப்பள்ளியில் மாணவியருக்கு இரண்டும்; மாணவர்களுக்கு இரண்டும், ஆசிரியர்களுக்கு ஒன்றும் என ஐந்து கழிப்பறைகள் உள்ளன.கடந்த 2010ல் காந்திஜெயந்தி அன்று கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை துவங்கி, தொடர்ந்து செய்து வருகிறார். பள்ளி கழிப்பறையை தானே சுத்தம் செய்வது குறித்து மாணவ - மாணவியருக்கு நேரடியாக காண்பிக்கிறார்.சொந்த செலவு
தனது சொந்த பணத்தில், கழிப்பறை பயன்பாட்டுக்காக பினாயில், சோப் வாங்குகிறார். பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் கண்ணாடி, சீப்பு, பவுடர், விபூதி, குங்குமம் போன்றவற்றையும் வழங்கி உள்ளார்.இதுமட்டுமின்றி, ஹொங்கஹள்ளி பள்ளியில் அக் ஷரா ஜோலிகே என்ற புத்தக பை திட்டம் கொண்டு வந்துள்ளார். வாரத்தில் ஒரு முறை மாணவர்கள், பெற்றோர், பொது மக்கள் தாங்கள் விளைவித்த பழங்கள், காய்கறிகளை பள்ளிக்கு கொண்டு வரலாம். பிறந்த நாள் உட்பட பண்டிகை நாட்களில், மதியம் உணவாக கேழ்வரகு களி, கூட்டு, தயிர், பாயாசம் சாப்பிட்டு கொண்டாடுகின்றனர்.மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக திகழும் மஹாதேஸ்வரசாமி கூறுகையில், குழந்தைகள் ஆசிரியரை பார்த்து கற்றுக் கொள்வர். நாமே கழிப்பறைகளை சுத்தம் செய்யும் போது, அதை பார்த்து குழந்தைகளும் ஆர்வம் காட்டுவர், என்றார்.
