அரசு பள்ளிகளிலும் சுற்றுலா திட்டம் செயல்படுத்துங்க! அரசுக்கு பெற்றோர் வலியுறுத்தல்
அரசு பள்ளிகளிலும் சுற்றுலா திட்டம் செயல்படுத்துங்க! அரசுக்கு பெற்றோர் வலியுறுத்தல்
UPDATED : டிச 27, 2023 12:00 AM
ADDED : டிச 27, 2023 10:23 AM
உடுமலை:
அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் வெளியுலக அனுபவங்களை கற்றுக்கொள்ள சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை, செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், குழந்தைகளின் கற்றல் திறன்களை மேம்படுத்த, அரசின் சார்பில், தொழில்நுட்ப மேம்பாடு முதல், பள்ளிச்சூழல் வரை அனைத்திலும், பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.கற்றல் திறன்கள் மட்டுமின்றி, தற்காப்பு கலை மற்றும் இணைசெயல்பாடுகளும் ஊக்கப்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு, வெளியுலக அனுபவத்தை கற்றுக்கொடுக்க, களப்பயணம் அழைத்துச்செல்லப்படுகின்றனர்.பள்ளியின் அருகில் உள்ள, அரசுத்துறை அலுவலகங்களுக்கும், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கும் ஆசிரியர்கள் அழைத்துச்செல்கின்றனர். இருப்பினும், குழந்தைகள், வெளியுலக அனுபவத்தை முழுமையாக பெறுவதற்கு, சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளி நிர்வாகத்தினர் ஆர்வம் காட்டுகின்றனர்.குழந்தைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துகளில் பயணம் செய்வதால், வெளியுலக அனுபவத்தை பெறுகின்றனர். வரலாற்று சிறப்பிடங்கள், கோவில், போன்ற சுற்றுலா தலங்களுக்கு மாணவர்கள் சென்று வருவதால், மனதளவில் புத்துணர்ச்சி பெறுகின்றனர்.பள்ளி நிர்வாகத்தினர் விரும்பினாலும், அரசின் சார்பில் இதற்கான அனுமதி இல்லாததால், விடுமுறை நாட்களில், பெற்றோரின் விருப்பத்தோடு, ஆசிரியர்கள் குழந்தைகளை அழைத்துச்செல்கின்றனர்.சுற்றுலா சென்று வரும் குழந்தைகள், சுற்றி நடக்கும் செயல்களையும், கவனித்த பல மனிதர்கள் குறித்தும் விவரித்தும், ஆசிரியர்களும் கேட்டறிந்தும் அறிவை மேம்படுத்திக் கொள்கின்றனர்.மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் பலரும் அரசுப்பள்ளிகளில் படிப்பதால், இவ்வாறு சுற்றுலா செல்வதை பெற்றோரும் விரும்புகின்றனர். இருப்பினும், ஆசிரியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே, சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவதால், பல பள்ளிகளில் இது சாத்தியமில்லை.உரிய பாதுகாப்புடன், அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளை ஆண்டுதோறும் ஒருமுறையாவது சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை, அரசு செயல்படுத்த வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.