UPDATED : டிச 27, 2023 12:00 AM
ADDED : டிச 27, 2023 10:40 AM
சென்னை:
சென்னை, நுாற்றுக்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்ற, தென் மாநில அளவிலான செஸ் போட்டியை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று துவக்கி வைத்தார்.முதல் முறையாக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை சார்பில் தென் மாநில பல்கலைகளுக்கு இடையிலான செஸ் போட்டி, பெருங்குடியில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கியது.பெண்களுக்கான போட்டியில் தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 100 பல்கலைகளில் இருந்து, 600 வீராங்கனையர் பங்கேற்றனர். போட்டிகள், ஏழு சுற்றுகள் வீதம் 29ம் தேதி வரை தொடர்ந்து நடக்கின்றன.நேற்று காலை நடந்த முதல் நாள் போட்டியை, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். அந்நிகழ்வில், பல்கலையின் துணைவேந்தர் சந்தோஷ்குமார், பதிவாளர் கவுரி ரமேஷ், பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையின் சி.இ.ஓ., மருத்துவர் அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.போட்டியில் தேர்வாகும் நான்கு பல்கலை அணிகள், ஜனவரில் நடக்கும் அகில இந்திய போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளரும், பல்கலையின் உடற்கல்வி இயக்குனருமான பரமசிவம் தெரிவித்தார்.