UPDATED : ஜன 06, 2024 12:00 AM
ADDED : ஜன 06, 2024 10:49 AM
அவனியாபுரம்:
பள்ளி மாணவ, மாணவிகள் சத்தான உணவுகளை சாப்பிடுவதை உறுதி செய்யவும் துரித உணவு மற்றும் பாக்கெட்டில் அடைத்து விற்கும் பொரித்த தின்பண்டங்களை சாப்பிடுவதை தடுப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம்.பள்ளிகளில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட 30 சதவீத மாணவிகள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதவிடாய் ஆரம்ப கால கட்டம் என்பதாலும் கீரை, காய்கறி போன்ற சத்தான உணவுகளை சாப்பிடாததாலும் ரத்தசோகையால் அவதிப்படுகின்றனர். இதனால் உடல் சோர்வு, பாடங்களில் கவனமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.இதை சரிசெய்யும் வகையில் பள்ளிகளில் 1 - 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வீடுகளில் இருந்து சத்தான சரிவிகித உணவு கிடைப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்கிறார் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன்.அவர் கூறியதாவது:
கடந்தாண்டு அவனியாபுரம் எஸ்.பி.ஜெ., பள்ளி தானாக முன்வந்து இத்திட்டத்தில் சேர்ந்தது. ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். மாதந்தோறும் ரத்தசோகை, உணவு சார்ந்த பேச்சு, ஓவியப்போட்டி நடத்தினோம். ஓராண்டு முடிவில் அனைத்து மாணவர்களும் விழிப்புணர்வு பெற்ற நிலையில் பள்ளிக்கு ஈட் ரைட் ஸ்கூல் சான்றிதழ் வழங்கினோம்.தமிழகத்தில் திருவள்ளூர் பள்ளியை அடுத்து 2வதாக மதுரை பள்ளிக்கு தான் இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தாண்டு 25 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 23 அரசுப் பள்ளிகள். இத்திட்டத்திற்காக அரசுப் பள்ளிகளுக்கு மத்திய அரசு தலா ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது என்றார்.