பள்ளி வளர்ச்சிக்கு இத்தனை குழுக்களா... அதிகாரம் இழக்கும் தலைமையாசிரியர்கள்
பள்ளி வளர்ச்சிக்கு இத்தனை குழுக்களா... அதிகாரம் இழக்கும் தலைமையாசிரியர்கள்
UPDATED : ஜன 18, 2024 12:00 AM
ADDED : ஜன 18, 2024 09:55 AM
கோவை:
அரசுப்பள்ளிகளில், இரண்டுக்கும் மேற்பட்ட குழுக்கள் இருப்பதால், தலைமையாசிரியர்களுக்கான அதிகாரம் குறைவதாக புகார் எழுந்துள்ளது.அரசுப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பல ஆண்டுகளாக செயல்படுகிறது. பெற்றோரை தலைவராக கொண்ட, இக்குழுவின் மாநில தலைவராக பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் உள்ளார். ஒவ்வொரு மாணவரிடமும், ஆண்டுக்கு தலா 50 ரூபாய் வசூலித்து, பெற்றோர் ஆசிரியர் கழக வங்கி நிதியில் செலுத்தப்படுகிறது.இதில் குறிப்பிட்ட தொகையை, பள்ளி கற்றல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல், உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி மைய ஊழியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர், கல்வியாளர்கள், இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் என 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு, சமீபத்தில் உருவாக்கப்பட்டது.துவக்கத்தில் இக்குழுவின் பெயரில் வங்கி கணக்கு துவங்கி, பராமரிப்பு நிதி பகிரப்பட்டது. பள்ளிக்கான தேவைகளுக்கு, குழு தலைவர், உறுப்பினர்களின் ஒப்புதலோடு மட்டுமே, வங்கியில் இருந்து தொகையை எடுக்கும் நடைமுறை இருந்தது. தற்போது, சிங்கிள் நோடல் ஏஜென்ஸி என்ற வங்கி கணக்கு பரிமாற்றம் மூலம், பராமரிப்பு தொகை வழங்குவதால், எல்லா வகை பணிகளுக்கும், ரசீதுடன், வங்கி கணக்கு இணைத்தால், ஆன்லைன் மூலம் மட்டுமே பரிமாற்றம் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், முன்னாள் மாணவர் சங்கம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் சில பள்ளிகளில், பள்ளி புரவலர்களுக்கான குழுவும் இயங்கி வருகிறது. இப்படி ஒரு பள்ளியில், இரண்டுக்கு மேற்பட்ட குழுக்கள் இருப்பதால், பள்ளி கற்பித்தல், நிர்வாக பணிகளில், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்களின் தலையீடு அதிகரிப்பதாக, தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சிக்கல் எங்கிருந்து துவங்குகிறது?
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் அன்பரசன் கூறுகையில், சில அரசுப்பள்ளிகளில், முக்கிய தினங்களுக்கு கொடியேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, எந்த குழுவின் தலைவர், உறுப்பினர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பது என்பதில் இருந்தே, சிக்கல் தொடங்குகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் குழுவில் இருப்பதால், கட்சியினரின் ஆதிக்கம் உள்ளது.நிர்வாக பணிகளில், தலைமையாசிரியர்களின் முடிவு இறுதியானதாக இருக்க வேண்டும். அரசுப்பள்ளிகளின் வளர்ச்சியில், பெற்றோர், ஊர்மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு அவசியம்தான். இதற்கு ஒரே குழு உருவாக்கி, அனைவரையும் உறுப்பினர்களாக நியமித்தாலே போதும். ஒவ்வொரு குழுவிற்கும், பதிவேடு பராமரிப்பது, கூட்டம் நடத்துவது போன்ற பணிகளால், பெரிதும் சிரமமாக உள்ளது என்றார்.