UPDATED : ஜன 19, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 08:37 AM
சென்னை:
அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் சார்பில், டில்லியில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், விஞ்ஞானிகள் கவுரவிக்கப்பட்டனர்.அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் சார்பில், அரைஸ் 2024 என்ற தலைப்பில் நான்கு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. அதில், அனைத்து துறைகளிலும், இந்தியாவை உலகின் முன்னணி நாடாக்கும் வகையில், தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி விவாதிக்கப்பட்டன.அதில், அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தைச் சேர்ந்த 24 ஆராய்ச்சியாளர்கள், வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக கணிக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர். கருத்தரங்கில் தலைமை ஏற்ற அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தின் வேந்தர் மாதா அமிர்தானந்தமயி பேசியதாவது:
வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்த பாதுகாப்பான வேலை, பணம், வீடு, கார் உள்ளிட்ட வசதிகள் தேவை. என்றாலும், அவற்றால் மட்டும் மனமகிழ்ச்சியும் நிறைவும் வந்துவிடாது. அன்பு, மனிதாபிமானம், பரிவு, மற்றவர்களின் வலியை உணர்ந்து, அதைப் போக்க நாம் எடுக்கும் முயற்சி ஆகியவைதான் முக்கிய தேவை. அவை சாத்தியமாக முதிர்ந்த எண்ணமும் செயலும் ஒத்துழைக்க வேண்டும்.அதற்கு, உலகத்தை வெளிநோக்கி பார்க்க அறிவுக்கண்ணை திறக்கும் அதேநேரம், நமக்குள் உள்ள உலகத்தை உள்நோக்கி பார்க்க அகக்கண்ணை திறக்க வேண்டும். அதற்கான கல்வியை நாம் ஊட்ட வேண்டும். அப்போதுதான் வாழ்வு நிறைவு பெறும்; மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த அறிஞர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.