UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 10:01 AM
சிக்கபல்லாபூர்:
வெறும் 15க்கு 15 அடி நிலத்தில், கோழி வளர்த்து மென்பொருள் பொறியாளர் ஒருவர் சாதித்துக் காட்டிஉள்ளார்.சிக்கபல்லாபூர் நகரில் இருந்து மஞ்சனபலே கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வின் குமார். மென்பொருள் பொறியாளரான இவர், பெங்களூரில் பணியாற்றி வருகிறார். இப்பணியை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என்று நினைத்த அவர், 2020ல் கோழி வளர்ப்பில் கவனம் செலுத்தினார். தனது வீட்டின் அருகிலேயே, 15க்கு 15 இடத்தில், தற்போது 200க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.திங்கள் முதல் வெள்ளி வரை பெங்களூரில் பணிபுரியும் அஸ்வின், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கோழிகளின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வருகிறார். மற்ற நாட்களில் அவரின் குடும்பத்தினர் கவனித்து கொண்டனர்.இங்கு துருக்கி, கிரிராஜா, கடக்நாத், சிட்டி சிக்கன், வனராஜா ரக கோழிகள் இங்கு உள்ளன. அதே வளாகத்தில் 10க்கு 5 என்ற அளவில் சிறிய கொட்டகை கட்டப்பட்டு உள்ளது. இதில், 30 குஞ்சுகளை வளர்க்கப்படுகிறது.கொட்டகைக்காக புதிதாக பொருட்கள் வாங்கவில்லை. பழைய பொருட்கள் விலைக்கு போடப்படும் கடைகளில் இருந்து பொருட்களை கொண்டு வந்து கொட்டகை அமைத்தார். கொட்டகைக்காக பணத்தை செலவழிப்பதை விட, கோழிகளில் முதலீடு செய்வது நல்லது என நினைத்தார். அவர் கூறியதாவது:
நாங்கள் கட்டி உள்ள கொட்டகையில், 300 கோழிகளை வளர்க்கலாம். ஒரு குஞ்சுக்கு தினமும் 200 கிராம் உணவு கொடுக்கிறோம். குளிர்காலத்தில் இஞ்சி, பூண்டு, மஞ்சள் கலந்த தண்ணீரை கொடுப்போம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கோழிகளை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. வார இறுதி நாட்களில் நோய் இருக்கிறதா, கோழியின் நிலை என்ன என்பதில் கவனம் செலுத்துகிறேன். எங்கள் தந்தைக்கு மஞ்சள் காமாலை இருந்தது. அந்நேரத்தில் நாட்டுக்கோழி முட்டைகளை கொடுக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார்.ஆனால், பல இடங்களில் நாட்டுக்கோழி முட்டைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஒரு முட்டை 25 ரூபாயாக இருந்தது.பிறகு நாமே நாட்டுக்கோழிகளை வளர்க்க வேண்டும் முடிவு செய்தேன்.வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் முட்டை கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். எதிர்காலத்தில் இந்த தொழிலை விட்டுவிட்டால், வேறு தொழிலை தேட வேண்டிய அவசியம் இல்லை.இப்போது இந்த தொழிலை ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் நாட்களில், ஒரு ஏக்கரில் கோழி மற்றும் மீன் நடவு செய்யும் திட்டம் உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தினமும் நாட்டுக்கோழி முட்டைகள் வாங்க, எங்களிடம் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.